தனது வீட்டில் சுயதனிமையிலிருந்த மாத்தளை மஹவெல பொலிஸ் நிலைய கொன்ஸ்டபிள் ஒருவர், தனிமைப்படுத்தலில் இருந்தவாறே தனது கடையைத் திறந்து வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில், விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென,மாத்தளை சிரேஷட பொலிஸ் அதிகாரி, அநுருத்த பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற, பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதால், அவரது மகனான, குறித்த கொன்ஸ்டபிள்; வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த கொன்ஸ்டபிள் தனது வீட்டுடன் இருந்த கடையைத் திறந்து வர்த்தகத்தில் ஈடுபட்டாரென, பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவொன்று, குறித்த கடையையும் மூடியதுடன், கொன்ஸ்டபிளை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன், தனிமைபடுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, இந்த பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

