பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் புதைப்பு

224 0

201612051128092617_remains-of-former-cuban-dictator-fidel-castro-laid-to-rest_secvpfகியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அரசு மரியாதையுடன் சான்டியாகோ நகரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

கியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒன்பதுநாள் துக்கம் அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அவரது உயிர் பிரிந்த சிலமணி நேரத்துக்குள் உடல் தகனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சாம்பல் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிவந்த பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அவரது விருப்பத்தின்படி இன்று சான்டியாகோ நகரில் உள்ள அரசு மரியாதையுடன்  சான்ட்டா இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.39 மணியளவில் தொடங்கியது.

இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சான்டியாகோவில் திரண்டனர். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த கியூபா மக்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி, ‘பிடல் காஸ்ட்ரோவின் புகழ் வாழ்க!’ என்று முழக்கமிட்டு, அவரது சாம்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இபிஜெனியா கல்லறையில் பிடல் காஸ்ட்ரோவின் சாம்பலை கியூபா அதிபர் ரவுக் காஸ்ட்ரோ பெற்றுக் கொண்டார். அந்நாட்டு ராணுவ தளபதியின் சீருடையில் இருந்த ரவுல் காஸ்ட்ரோ, தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ரோவின் சாம்பலை ஒரு கலசத்தில் இட்டு, கல்லறைக்குள் புதைத்தார்.

‘பிடல்’ என்ற பொன்னிற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சலவைக்கல் அந்த கல்லறைமீது மூடப்பட்டது. அப்போது, தங்கள் நாட்டின் புரட்சித்தலைவருக்கு தேசிய கீதத்தின் பின்னணியில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

அவரது சாம்பல் புதைக்கப்பட்ட இதே இடத்தில்தான் கியூபாவின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரரான ஜோஸ் மார்ட்டியின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு இங்குள்ள ஒரு சிறைச்சாலை மீது பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படையினர் நடத்திய ஆவேச தாக்குதலின்போது பல புரட்சியாளர்கள் பலியானது, குறிப்பிடத்தக்கது.