தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பில்லை

256 0

201612051149382099_law-and-order-tamilnadu-union-home-minister-governor_secvpfதமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம், கவர்னர் வித்யாசாகர்ராவ் விளக்கம் அளித்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டபோது தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்தார்.

அவருக்கு தகவல் கிடைத்ததும் இரவோடு இரவாக விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தார். நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் விவரங்களை கேட்டு அறிந்தார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் ஆகியோரிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்தும் கவர்னர் கேட்டறிந்தார்.

அதன்பிறகு இரவு 11.30 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கவர்னருக்கு அதிகாரிகள் விளக்கினார்கள்.

இந்த சூழலில் டெல்லி சென்றிருந்த தமிழக உள்துறை செயலாளர் அபூர்வவர்மா அவசர அவசரமாக நேற்று இரவு சென்னை திரும்பினார். டி.ஜி.பி. மற்றும் உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளையும் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று உள்துறை மந்திரியிடம் கவர்னர் வித்யாசாகர்ராவ் விளக்கம் அளித்தார்.