சமூக கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு சென்ற ஆப்கான் பெண்ணின் கண் பார்வை பறிக்கப்பட்ட கொடூரம்

383 0

ஆப்கானிஸ்தானின் பொலிஸ்நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தனது கண்ணில் கத்தியால் குத்தியதையே தான் இறுதியாக பார்த்தேன் என தெரிவிக்கின்றார் 33 வயது கட்டேரா  அதன் பின்னர் அவர் தன் கண்பார்வையை முற்றாக இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் கண்விழித்துப்பார்த்தவேளை அனைத்தும் இருள்மயமாக காணப்பட்டது என்கின்றார் அவர்


நான் வைத்தியர்களிடம் ஏன் எதுவும் தெரியவில்லை என கேட்டேன் அவர்கள் அதற்கு கண்ணில் காயங்கள் உள்ளதால் பான்டேஜ் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்,ஆனால் எனது கண்ணை எண்ணிடமிருந்து பறித்துவிட்டனர் என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என அவரும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்,
ஆனால் இதனை மறுத்துள்ள தலிபான்கள் குறிப்பிட்ட பெண்ணின் தந்தையின் வேண்டுகோளின் பேரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடுகின்றனர்.
கட்டேரா வீட்டிலிருந்து வெளியில் சென்று வேலைபார்ப்பதை அவரது தந்தை கடுமையாக எதிர்த்தார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டேராவை பொறுத்தவரை இந்த வன்முறை அவரது கண்பார்வையை மாத்திரமல்லால் தனக்கென தொழில்வாழ்க்கையொன்றை உருவாக்கவேண்டும் என்ற அவரது கனவையும் பறித்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன்னரே காஜ்னி பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவில் அவர் இணைந்துகொண்டார்.
பொலிஸில் ஒரு வருடமாவது நான்,வேலைபார்த்திருக்கவேண்டும் அவ்வாறு நான் வேலை பார்த்திருந்தால் இந்த சம்பவம் எனக்கு வேதனையை அளித்திருக்காது எனது கனவு மூன்று மாதங்களே நீடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரச அலுவலகங்கள் போன்றவற்றில் பணிபுரிய முயலும் பெண்களிற்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளிற்கான வெளிப்பாடு இது என்கின்றனர் மனித உரிமை செயற்பாட்டார்ளர்கள்.
கட்டேரா பொலிஸில் இணைந்துகொண்டமை தலிபான்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அமெரிக்கா தனது படையினரை வெளியேற்ற தொடங்கியுள்ளதால் ஆப்கானிஸ்தானில் பழமைவாத சமூக நெறிகளும் தலிபானும் வலிமைபெறும் நிலை காணப்படுகின்றது என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
சமீபநாட்களில் தலிபான் அமைப்பு தாங்கள் சரியா சட்டத்தின் கீழ் பெண்களின் உரிமைகளை மதிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் ஆப்கானின் கல்விகற்ற பெண்கள் பலர் இதனை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.


அடையாள அட்டைகளில் தாய்மார்களின் பெயர்களை சேர்த்துக்கொள்வதற்கு தலிபான் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை பெண்கள் தொடர்பான அந்த அமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்; வகையில் அமைந்துள்ளது.
அரசபதவிகள் பொதுதுறைகளில் உள்ள பெண்களின் நிலை ஆப்கானிஸ்தானில் எப்போதும் ஆபத்தானதாக காணப்பட்டு வந்துள்ள போதிலும் சமீபத்தைய வன்முறைகள் அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என தெரிவிக்கின்றார் ஆப்கானிஸ்தானிற்கான சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரச்சார பிரிவை சேர்ந்த சமீரா ஹமீடி.
கடந்த ஒரு தசாப்தகாலமாக பெண்களின் உரிமைகள் தொடர்பில் சாதிக்கப்பட்ட பாரிய முன்னேற்றங்களை தலிபானுடனான சமாதான உடன்படிக்கைகளிற்காக பலியிடக்கூடாது என அவர் தெரிவிக்கின்றார்.

சிறுவயது கனவு அழிக்கப்பட்டது


வீட்டிலிருந்து வெளியே சென்று வேலைபார்க்கவேண்டும் என்பதே கட்டேராவின் சிறுவயது கனவு .

தனது தந்தையை சம்மதிக்க செய்வதற்கான முயற்சியில் தோல்வியடைந்த அவருக்கு கணவரின் ஆதரவு கிடைத்தது.
ஆனால் தனது தந்தை தனது எதிர்ப்பை கைவிடவில்லை எனகட்டேரா தெரிவிக்கின்றார்.
நான் வேலைக்கு செல்லும் போதெல்லாம் எனது தந்தை என்னை பின்தொடர்வார் அதன் பின்னர் எங்கள் பகுதியில் உள்ள தலிபான் அமைப்பினை தொடர்புகொண்ட அவர் நான் வேலைக்கு செல்வதை தடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது அடையாள அட்டையின் விபரங்களை தலிபானிடம் தந்தையே வழங்கினார்,நான் பொலிஸில் வேலை பார்க்கின்றேன் என்பதை உறுதி செய்வதற்காக அவர் அவ்வாறு செயற்பட்டார் எனவும் கட்டேரியா தெரிவித்துள்ளார்.
கட்டேராவும் கணவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் தற்போது காபுலில் மறைந்து வாழ்கின்றனர்,
மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்கும்போதெல்லாம் கடும் அச்சம் தோன்றுகின்றது என தெரிவிக்கும் அவர் தனது மருத்துவர் ஒரளவாவது தனது கண்பார்வையை திருப்பி தருவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனது கண்பார்வையை மீண்டும் பெறமுடியும் என்றால் நான் மீண்டும் பொலிஸில் இணைந்துகொள்வேன் என அவர்தெரிவிக்கின்றார்.