சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவித்தல்

214 0

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் கொவிட்-19ஐ அடக்குவதற்கான செயலில் சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைத்துக் குடும்பங்களும் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 31,457 வீடுகளில் 84,000 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 13,911 வீடுகளில் 40,676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டுக் குழுவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்பட்டால் , அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகள் குறித்துச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகப் பராமரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் குறித்துச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த வர்த்தகத்திற்கு மாத்திரமே அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகள் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் லொறிகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் செயற்பாடுகளைத் தொடர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.