கடன் பொறியா? இராஜதந்திர பொறியா? தடுமாறும் இலங்கை அரசு!

385 0

க்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு, ஒரு புதிய இப்டோ (Indo -Pacific Treaty Organization -IPTO) ஆக தோற்றம் பெறுமா? என்பதே நமது சந்தேகம்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்ட குவாட் உரையாடலில், சீனாவின் பொருளாதார- இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது. சீனாவை எப்படி மடக்குவது? என்பதாக அந்த உரையாடல் வெளி விரிந்துள்ளது.

அக்டோபர் 9 இல், சீன உயர்மட்ட அரசியல் குழுவினர் இலங்கை சனாதிபதி கோட்டாவைச் சந்தித்ததோடு, இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 15 இல் பிரதமர் மகிந்தாவை அலரி மாளிகையில் சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்ளே. இதைத்தான் இராஜதந்திர மூலோபாய ஓட்டம் என்பார்களோ!

அநேகமாக இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட வல்லாதிக்க போட்டி நகர்வுகள், இம்மாத ஆரம்பத்திலிருந்தே வேகமாக நகரத் தொடங்கியதை காணலாம்.

சீனாவிற்கெதிராக கட்டமைக்கப்படும் புதிய அணியில், எவ்வாறு இலங்கையை உள்ளிழுப்பது என்கிற சிக்கலில் ‘குவாட்’ அணியினர் தடுமாறும் வேளையில், இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு சென்றுள்ளார் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பயோ.

ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்தியேகமான கவலைகள்.

திருக்கோணமலை எண்ணெய்த் தாங்கிகளை மீளப்பெறுதல், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை வழங்காமல் இழுத்தடித்தல் , இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்தல் போன்ற நகர்வுகளால் இலங்கை மீது இராஜதந்திரக் கடுப்பில் உள்ளது இந்தியா.

அமெரிக்காவின் கவலையோ வேறுவிதமானது.

சோபா என்கிற (Status of Forces Agreement -SOFA ) படைத்துறை உடன்படிக்கை , எம் சி சி ( Millennium Challenge Corporation ) இல் கைச்சாத்திடாமை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் கொடுத்தமை போன்ற காரணிகளால் இலங்கை மீது கோபத்திலுள்ளது அமேரிக்கா.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே, தென்னாசிய பிராந்திய ஆதிக்கம் குறித்த விவகாரத்தில் இராஜதந்திர போட்டிகள் நிலவினாலும், இலங்கையில் காலூன்றும் சீனாவை எதிர்கொள்ளும் விடயத்தில், ஓரணியில் இணைகின்றன.

2005 -2007 களில் எம் சி சி (MCC ) ஒப்பந்தம் குறித்து ,பாத் பைண்டர் ( Path Finder ) என்கிற மிலிந்த மொரகொடவின் சிந்தனை குழாம் நிறுவனம் ஒரு அறிக்கையை மகிந்தாவிடம் கையளித்தது.

அந்நேரத்தில் தீவிரமடைந்த யுத்தச் சூழலை காரணம் காட்டி, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்தார் மகிந்த ராஜபக்ச. ஆனாலும் 2009 தமிழின அழிப்புக் காலத்திலும் , எம் சி சிக்காகக் காத்திருந்தது அமெரிக்கா.

2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வரை, ‘அமெரிக்க எம்.சி.சி’ கிடப்பில் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வழங்கப்போகும் 480 மில்லியன் டொலரிற்காக, அதனைக் கையிலெடுத்தது மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம். ஆனால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

இத்தகைய மேற்குலக ஆதரவு கூட்டு ஆட்சியே, சீனக்கடனில் மகிந்தர் உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன நாட்டு கம்பெனிக்கு வழங்கியது.

ஆனாலும் 2020 வரை எம்.சி.சி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மைத்திரி- ரணில் அரசின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்த ராஜபக்ச கட்சி ஆட்சிபீடமேறியது.

அதுசரி…எம்.சி,சியில் என்ன இருக்கிறது?.

கிராம வீதிகளை புனரமைப்பது . கிராமங்களை மின்சாரமயமாக்குவது. குறுகிய- நடுத்தர வர்த்தகங்களை அபிவிருத்தி செய்யவது . இப்படிப் பல உட்கட்டுமானத் வேலைத்திட்டங்கள் உண்டு..

இதையேதான் 1 ட்ரில்லியன் டொலர்களை ஒதுக்கி, பெல்ட் அன்ட் ரோட் (Belt & Road) என்கிற மெகா திட்டத்தினூடாக, உலகின் பல நாடுகளிலும் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்கிறது சீனா.

‘அதை நான் செய்கிறேன். சீனா எதற்கு ?’ என்பதுதான் அமெரிக்காவின் கேள்வி.

இதற்கான நில ஒதுக்கீடானது நாட்டின் இறைமையை, நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதிக்கும் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

வழக்கமாகவே வெளிநாட்டுக்கு கடனில் இயங்கும் இலங்கை அரசு, கடனை அடைக்க துறைமுகங்களை தாரை வார்ப்பதும், உள்ளூரில் உற்பத்தியை ஊக்குவிக்காமல் வெளிநாட்டு இறக்குமதியை அதிகரிப்பதும், நாட்டின் இறைமையைக் காப்பாற்றுமா?. இல்லையென்பதே அதற்கான பதில்.

அதேவேளை இலங்கை அரசு எதிர் கொள்ளும் இராஜதந்திர நெருக்குவாரங்கள், புதிய வடிவமொன்றினை நோக்கி நகர்வதாகவே பலரும் கணிப்பிடுகின்றார்கள்.

தென் சீன கடல் வளையத்திற்குள் சீனாவை முடக்கும் அமெரிக்காவின் ஒரு பெரும் நகர்வாகவே குவாட் பேச்சுவார்த்தை பார்க்கப்படுகின்றது.

உலக வங்கியின் 2017 ஆண்டு புள்ளி விபரங்கள், மொத்த உள்ளூர் உற்பத்தியில் சீனாவும் அமெரிக்காவும் சமநிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரப்போட்டியானது , நாணயப் போரிலிருந்து வர்த்தகப் போராக மாறி, தற்போது தொழில் நுட்பப் போராக (Tech War ) விரிவடைந்துள்ளது.

சீனாவின் வழங்கல் சங்கிலியை (Supply Chain) உடைக்க , தனது நட்பு நாடுகளையே, ‘நீ அந்தப் பக்கமா? இல்லையேல் எங்கள் பக்கமா?’ என்று கேட்டு அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

சீனாவிலுள்ள அமெரிக்க கம்பெனிகளின் தொழிற்சாலைகளை வியட்நாம், தாய்லாந்து மற்றும் தென் கொரியா பக்கம் நகர்த்தும் அமெரிக்க இராஜதந்திரம், ஏன் இந்தியாவை நோக்கி அவற்றினை திருப்பவில்லை என்கிற கேள்வியும் எழுகின்றது.

இந்த நுட்பமான அரசியல் நகர்வு, ‘குவாட்’ இன் பாதுகாப்பு குறித்தான அக்கறையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

அதாவது இந்தியாவையும் இலங்கையையும் சீனாவிற்கெதிரான பாதுகாப்பு வலைப் பின்னலிற்குள் வைத்திருக்க அமெரிக்கா விரும்புவதுபோல் தெரிகிறது.

சோவியத் யூனியனை ஓரங்கட்ட சீனாவிற்கான சந்தைக் கதவுகளைத் திறந்து விட்ட அமெரிக்கா, இப்போது அதன் மறு தாக்கங்களை உணர்கிறது.

தற்போது சீனாவை முடக்க அணி சேர்க்கப்படும் நாடுகள், தனக்குப் போட்டியாக உற்பத்தித் துறையில் சரிநிகராக வளர்ந்துவிடக் கூடாதென்பதில், கவனமாக இருக்கும்.

வழங்கல் சங்கிலியை மட்டுமல்ல சீனாவின் வழங்கல் பாதைகளையும் தனது கட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் அமெரிக்காவின் ‘இரண்டாம் உலக போர் காலத்து தந்திரோபாய நகர்வுகள்’ சாத்தியமாகுமா? என்பதை , அதன் பொருளாதார மீட்சியே தீர்மானிக்கப்போகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் ‘நடுநிலையான அணிசேராக் கொள்கை’ என்பதற்கு சத்தியசோதனை ஏற்பட்டுள்ளது.

கடன்பொறிக்குள் அகப்பட்டவாறு, நடுவு நிலைமைப் பேண முடியாது என்கிற பூகோள அரசியல் யதார்த்த உண்மையை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் விரைவில் உணர்வார்கள்.

இன்றைய அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக இலங்கை அரசு தப்பலாம்.

ஆனால் அது நீடிக்காது.

  • இதயச்சந்திரன்