இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

191 0

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இக்காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் உள்ளது. இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.

இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த 30 வயதுக்குள் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நிதியுதவி தரப்பட உள்ளது.