மதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.

1031 0

அன்புடையீர்,

எமது தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி அரசினால் கொத்துக் கொத்தாக தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, 2008ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உணர்வோடு ஒன்றிணைந்த தாய்த்தமிழக திரைக்கலைஞர்கள் அனைவரையும் அன்போடு நினைவில் கொள்ளுகின்றோம்.

2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இனப்படுகொலையினை தொடுதூரத்தில் இருந்தும் தடுக்கமுடியாமல் போனமையானது, உலகில் வேறெந்த இனத்திற்கும் நேர்ந்திராத பேரவலம். இறுதியில் அழிவின் விளிம்பில் நின்றிருந்த மக்கள், தாய்த்தமிழகம் எம்மை ஒருபோதும் கைவிட்டு விடாது உறுதியாகக் காப்பாற்றும் எனும் நம்பிக்கையோடு எதுவும் பலனளிக்காது தமிழ்நாட்டின் திசையை நோக்கி கைநீட்டியபடி ஏங்கி ஏங்கிச் செத்த கொடுமையானது தமிழ் இனத்தின் வரலாற்றுக் கொடுந்துயரம்.

ஆனால் இதன் பின்பாயினும், இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதி கேட்டாவது இந்தப் பத்தாண்டுகளில் தாய்த்தமிழக உறவுகள் ஒன்றிணைந்தார்களா என்றால் அதுவும் பெரும் ஏமாற்றத்தையே எமக்கு அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்க்கலை உலகம் குறைந்தது ஆற்றுகைப்படுத்தும் முயற்சிகளையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். 2009ஆம் ஆண்டிற்குப்பின் ஆகக்குறைந்தது ஐம்பது திரைப்படங்களாவது இனத்தின் வலி சுமந்து வெளிவந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று நிலைமையோ வேறு விதமாக அமைந்துள்ளது. உங்களது தொப்புள்கொடி உறவுகளை எந்தச் சிங்கள இனவெறி அரசு அழித்ததோ அந்த இனவெறி அரசின் ஊதுகுழலாக, கைக்கூலியாகச் செயற்பட்டுவருகின்ற ஒருசில மனிதாபிமானமற்ற, மனிதகுல விரோத சக்திகளை படைப்பியல் ஊடகங்களில் அடையாளப்படுத்த முயற்சிப்பது எமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

அன்பிற்குரிய தமிழ்த்திரை கலைஞர்களே, போர்நெருக்கடி மிகவும் இறுக்கமாக இருந்த காலங்களில் கூட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டின் அறிஞர்களை, படைப்பாளிகளை, கலைஞர்களை நேரில் வரவழைத்து பாராட்டவும் மதிப்பளிக்கவும் தவறியதில்லை. வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற திரைப்படங்களே சிறுவயதில் தனக்கு ஊக்க சக்தியாக விளங்கியதென பதிவிடும் தலைவர் அவர்கள் திரைப்படத்துறையின்மீதும் அக்கலைஞர்கள் மீதும் எப்பொழுதும் பெருமதிப்புக் கொண்டிருந்தார்.

எனவே அன்பார்ந்த கலையுலகப்பெருமக்கள் அறத்தின்வழிநின்று மிகப்பெரும் பொறுப்போடு பணியாற்ற வேண்டும் என அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்ளுகின்றோம். இந்தியப்பெரும் தேசத்திற்கு மிகவும் பக்கபலமாகவும் நெருக்கமாகவும் இருக்கக்கூடிய இனமக்கள் உலகப்பந்தில் ஈழத்தமிழர்கள் மட்டுமே. அதேபோன்று இன்றைய பூகோள அரசியலில் இந்தியதுணைக்கண்டத்திற்கு மிகவும் பாதுகாப்பான ஓர் அரசு அமையுமெனில் அது தமிழீழத்தனியரசு ஒன்றாக மட்டுமே இருக்கமுடியும். இன்றளவும் சிங்கள-பௌத்த இனவெறியர்களின் தம்மதீப கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய எதிர்புவாதமே ஈழத்தமிழர்களை அவர்கள் படுகொலை செய்வதற்கான மிக முக்கிய காரணம்.

தென்னிந்திய தமிழ்மக்களை அடிமைகளாய் அழைத்துவந்து, இலங்கையின் மலையகப்பகுதிகளில் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சிக்காக அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சி விட்டு 1940 களின் இறுதியில் அவர்களது குடி உரிமையினையும் வாக்குரிமையையினையும் பறித்தது சிங்கள இனவெறி அரசு. இன்றும் அந்த மக்கள் பெரும் அவலவாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறைந்தது மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களையாவது படமாக்க முயற்சிப்பது மேலானது.தமிழ்த்திரை உலகின் மூத்த படைப்பாளிகள், மதிப்புமிக்க அரசியல்த்தலைவர்கள், மூதறிஞர்கள், கலைஞர்கள், இளம் மாணவ மாணவிகள் இவர்கள் மட்டுமல்லாது எவரைத் தனது திரை உலகின் குருநாதர் என்றும் தன் தந்தைக்கே நிகரானவர் என்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களே குறிப்பிட்ட மரியாதைக்குரிய இயக்குனர் சீனு ராமசாமி அவர்களது வேண்டுகோளுக்கும் செவி சாய்க்காது விஜய் சேதுபதி அவர்கள் கள்ளமௌனம் காத்துவருவது, உலகத்தமிழர்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதனைவிடவும் இவர்கள் எல்லோரது வேண்டுகோளுக்கும் பதில் எதுவும் தெரிவிக்காது, முத்தையா முரளீதரன் எழுதிய கடிதத்தினை தனது கீச்சகப் பக்கத்தில் (Twitter) பதிவிட்டு, ஏதோ முரளியின் வேண்டுகோளை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம் என்று காட்டிக் கொள்கிறார். 800 திரைப்படத்தில் நடிப்பதைக்காட்டிலும் இப்பொழுது விஜய் சேதுபதி செய்துகொண்டிருப்பதுதான் மிகவும் ஆபத்தானது, சூழ்ச்சிகரமானது. உண்மையில் இங்கே சிங்கள இனவெறி அரசு அல்லது அதன் முகமாக முத்தையா முரளீதரன் தனது நோக்கில் வெற்றி கண்டே வருகிறார்.

இனப்படுகொலையாளிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வேறு சாயம் பூச முயல்கிறார். உண்மையில் ஒரு நல்ல நடிகராக, முற்போக்குச் சிந்தைனையாளராக, மிகவும் எளிமையான நல்ல மனிதர் என்றெல்லாம் பெயரெடுத்த விஜய் சேதுபதி அவர்கள் வீழ்ந்த சூழ்ச்சி வலை எது? குறைந்தது இதற்கான பதிலையாவது தருவீர்களா மக்கள் செல்வனே. முத்தையா முரளீதரன் போன்ற மனித விரோத சக்திகளை தாண்டி மீண்டும் ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையினை பேசுபொருளாக்கியமைக்கு விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி.

இதுபோன்ற, தமிழ்த்தொன்மங்களின் வழியாக மிகவும் தந்திரமாகவும் சூழ்ச்சிகளோடும் எம்மை வீழ்த்த நினைப்பவர்களது வலைகளில் வீழ்ந்து விடாது பயணிக்க வேண்டுமென எமது தாய்த்தமிழக கலை உலகப் பெருமக்களை மீண்டும் ஒருமுறை உறவுரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

“நான் கலை இலக்கியங்களை மதிப்பவன், கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.