யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு

197 0

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தொற்றுக்குள்ளானவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

பின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.

இவர் கடந்த ஐப்பசி 06 ம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார். மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட புகையிரத வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 – 2226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”