திருக்கோவிலில் துப்பாக்கித் தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் உட்பட மூவர் கைது!

230 0

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) தேசிய புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய புலனாய்வுப் பிரிவினர் திருக்கோவில் பிரதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னால் இயங்கி வரும் லேத் மெசின் கடையை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியைத் தயாரித்து வந்த தச்சுத் தொழிலாளியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரையும் கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.