20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும்

225 0

 “அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் நான்கு பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் முதன்மைச் சரத்துக்களை மீறுகின்றன எனவும், அவை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் நடைமுறைக்குக்கொண்டுவர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் நாங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.”

யாழ்ப்பாணத்தில் நேற்று(11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“இரண்டாவது குடியரசு அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீறுகின்றது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின்றி இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினோம்.

அரசமைப்புச் சட்டத்தில் சில முக்கியஉறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசமைப்புச்சட்டம் சொல்கின்றது. உயர்நீதிமன்றத்தில் இத்தகைய சட்டவரைவு சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பதை மட்டும் தான் உயர்நீதிமன்றத்தால் தெரிவிக்க முடியும் என்றும் அரசமைப்புச் சொல்கின்றது.

அரசமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது. இரண்டாவது குடியரசு அரசமைப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக் காலத்தின்போது, அவருடைய எந்தச் செயலையும் நீதி மன்றச் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கின்ற அரண் போடப்பட்டது. அந்தக்காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சற்று விலக்கப்பட்டது.

அதன் மூலம் ஜனாதிபதி செய்த அல்லது செய்யாமல் விடுகின்ற தவறுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்ய முடியும். கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அறிவிப்பை உயர்நீதிமன்றம் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அரசு என்ன தீர்மானத்தை எடுக்கப் போகின்றது எனத் தெரியவில்லை.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா? அல்லது சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கின்ற விடயங்களையும் கூட நிறை வேற்றி, அந்த விடயங்களை சர்வஜனவாக்கெடுப்புக்கு விடுவார்களா என்ற தீர்மானத்தையும் அரசு அறிவித்த பின்னர் தான் 20ஆவது திருத்தச் சட்ட வரைவைஇரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளமுடியும்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக் குப் பின்னரும் குறித்த திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்” என்றார்.