20ஆவது திருத்தச் சட்டம் -25 மனுக்கள் குறித்த பரிசீலனை நிறைவு

219 0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை (வெள்ளிக்கிழமை) முற்பகல் 9.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் மீதான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 7 மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.

குறித்த பரிசீலனை நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், நேற்று இரவு 7.20 மணி வரை மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன.

இதன்போது 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில், 32 மனுக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்து நிறைவு செய்தனர். இந்த நிலையில், 25 மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது மனுதாரர்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள், உத்தேச 20ஆவது திருத்தத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளுக்கு வரையரைகள் விதிக்கப்படும் என்பதுடன், தகவல் அறியும் உரிமைக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

20ம் திருத்தச் சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களில்> நீதித்துறை சுயாதீனம், அடிப்படை உரிமை என்பன தொடர்பில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்கள் வசமுள்ள நீதிமன்றத்தின் அதிகாரங்களை கையக்கப்படுத்தும் நிலைமை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

எனவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேலதிக பரிசீலனை நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் இடம்பெறவுள்ளன.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.