மாகாண சபை விவகாரத்தில் இந்தியா தலையிடவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது – சரத் வீரசேகர

205 0

மாகாண சபைகள் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் ஆகவே இது நாட்டின் ஜனாதிபதியால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாதுக்க பகுதியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மற்ற நாடுகளின் தலைவர்களால் இவை தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் இல்லை என் கூறினார்.

மேலும் மாகாணசபை முறையினை தொடர்ந்தும் செயற்படுத்தும் விடயத்தில் இந்தியா தலையிடவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்தோடு சுதந்திர இறையாண்மை கொண்ட இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது திருத்தம் நமது அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி இந்தியா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது, அவற்றில் ஒன்று விடுதலை புலிகளை நிராயுதபாணியாக்கப்பட்டது, அது ஒருபோதும் நடக்கவில்லை.

இந்தியாவால் அதைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. எனவே, இந்தோ-இலங்கை ஒப்பந்தம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குரியது என்றும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்தோடு 19 இன் மூலம் இழக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை திருப்ப வழங்கும் முகமாக 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.

நிரைவேற்று அதிகாரம் இன்று நாட்டினை நிர்வகிக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர் இருப்பினும் 19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கு இருந்த அதிகாரத்தினை குறைப்பதற்கான முயற்சி இதுவல்ல என்றும் குறிப்பிட்டார்.