வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபை தீர்மானம்: ஸ்டாலின்

252 0

கிராம சபை கூட்டங்களில், வேளாண் சட்டங்களை எதிர்த்து, கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:
விவசாயிகளை, ‘கார்ப்பரேட்டு’களுக்கு அடகு வைக்க துடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும், கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகளின் நலனையும், வேளாண் நலனையும் மனதில் வைத்து, கண்டன தீர்மானத்தை, கட்சி வித்தியாசம் பாராமல்,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை, மத்திய அரசுக்கு தெளிவுபட தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தலைக்குனிவு

ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை: தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் வாயிலாக, இடித்து தள்ளப்பட்டுள்ளது என, பாபர் மசூதி வழக்கில், உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது. மசூதி மட்டுமல்ல, எந்த ஒரு மத வழிபாட்டு தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும், அநியாயம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ., தோல்வி அடைந்துள்ளது.

நாட்டை பாதுகாத்திட வேண்டிய, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும், நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறி, மத்திய அரசின் கூண்டு கிளியாக மாறி விட்டது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழான தன் கடமைகளை துறந்திருப்பது, நீதியின் பாதையில், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தி விடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.