நீதிக்காகப் போராடுவதை தடை செய்யும் நடவடிக்கை மனித உரிமை மீறல் – ஜெனீவாவில் பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு

286 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடுத்தமையானது மனித உரிமை மீறல்களாகும் என பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடரில் குறித்த அமைப்பின் சார்பாக உரையாற்றி அர்த்னா பிரபாகரன் இந்த விடயத்தை இதனைத் தெரிவித்தார்.

உண்மை நீதியின் சிறப்பு அறிக்கையாளர் அண்மையில் வழங்கிய அறிக்கையில் தமிழர்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டதை தாம் வரவேற்பதாகவும் அர்த்னா பிரபாகரன் குறிப்பிட்டார்.

11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இறுதி யுத்தத்தில் குற்றங்களுக்கு பொறுப்பான இராணுவ குற்றவாளிகளை உயர் பதவிக்கு நியமித்ததை நினைவுபடுத்திய அவர், தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கவும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் செயற்படவும் நிறுவனங்களை ஒழங்குபடுத்தவும் பாதுகாப்பு அமைச்சை நியமிப்பது மிகவும் கவலையைத் தருகிறது எனவும் கூறினார்.

சிங்கள பௌத்த தேசியத்தை அரசு பாதுகாத்து வளர்ப்பதால் ஈழத்தமிழர்கள் மேலும் ஓரங்கட்டப்படுகின்றனர் என்றும் இலங்கை ஜனாதிபதியின் தொல்லியல் செயலரணியில் 6 பௌத்த துறவிகளை மேலும் சேர்த்தபோதும் ஒரு தமிழரைக்கூட அதில் இணைக்கவில்லை என்றும் அர்த்னா பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஓகஸ்ட் 30ஆம் திகதி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற இராணுவமும், பொலிஸாரும் நெருக்குதலுக்குள்ளாக்கி நீதிமன்றத்தின் ஊடாக தடைசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செயலானது அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான நீதிக்காக போராடுவதை தடைசெய்ததையும் மனித உரிமை மீறல்களாகும் என அர்த்னா பிரபாகரன் தெரிவித்தார்.