101 வயது முன்னாள் ராணுவ வீரரிடம் நேரில் மனு வாங்கிய உதவி கலெக்டர்

260 0

மகனுக்கு கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்த 101 வயது முன்னாள் ராணுவ வீரரிடம் நேரில் வந்து உதவி கலெக்டர் மனு வாங்கினார்.

ஒட்டப்பிடாரம் தாலுகா ஜெகவீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருசாமி நாயக்கர் (வயது 101). இவர் தனது மகளுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் வந்தார். வயது முதுமையின் காரணமாக அலுவலகத்திற்கு வர முடியாமல் காரில் அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் விஜயா தனது அலுவலகத்தில் இருந்து வெளியே நேரில் வந்து காரில் அமர்ந்திருந்த குருசாமி நாயக்கரிடம் மனுவை பெற்றுக்கொண்டார்.

அந்த மனுவில், “தனக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நான் கடந்த 25 ஆண்டுகளாக எனது மூத்தமகள் பராமரிப்பில் உள்ளேன். 1991-ல் எனது மூத்த மகன் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து எனது சொத்தை எழுதி வாங்கி கொண்டார். இதுதொடர்பாக எப்போதும் வென்றான் போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், எனது மூத்த மகனுக்கு 1991-ல் கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.