தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

251 0

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று பகல் இதற்கான கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் 14 முக்கியஸ்த்தர்கள் கையொப்பமிட்டனர்.

வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்கள்.

இந்தக் கடிதத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய சார்பு கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சிவஞானம் ஸ்ரீதரன், ரெலோ சார்பில் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.  புளொட் சார்பில் கலந்து கொண்ட பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா, ஈழத் தமிழர் சுயாட்சின் கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சி.சிற்பரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தாயகப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு கூரல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீதிமன்ற உத்தரவை மீறி நினைவு நிகழ்வு நடத்தியதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மாநாடு நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இவ்வாறு நினைவுகூருவதை தடை விதிப்பதானது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும் என்பதைால் அரசாங்கம் இந்தத் தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இதுகுறித்த வலியுறுத்தலை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கும் வகையிலும், தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரியும் இன்று மேற்படி கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.