கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் வராததால் ‘கோவிஷீல்டு’ ஆராய்ச்சியில் தாமதம்: ஆரோக்கியமானவர்கள் பரிசோதனைக்கு வர அழைப்பு

298 0

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் முன்வராததால் ஆராய்ச்சியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முறை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

17 மையங்களில் பரிசோதனை

சென்னை அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1,600பேருக்கு இந்த தடுப்பு மருந்துபரிசோதனை நடத்த திட்டமிடப் பட்டது.

சென்னையில் 10-ம் தேதிக்குள் (இன்று) பரிசோதனை தொடங்க இருந்த நிலையில், தன்னார்வலர்கள் முன்வராததால் ஆராய்ச்சி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மருந்து செலுத்தப்பட்டவருக்கு…

இதற்கிடையே, இங்கிலாந்தில் நடைபெறும் பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால்,பரிசோதனையை தள்ளிவைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான பக்க விளைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு முன்வரலாம் என்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “சென்னையில் 2 மருத்துவமனைகளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது. 300 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் முன்வராததால் ஆராய்ச்சி இன்னும் தொடங்கப்படவில்லை.

6 மாதங்கள் கண்காணிப்பு

18 வயதுக்கு மேற்பட்ட, கரோனாவைரஸ் தொற்று ஏற்படாத ஆரோக்கியமானவர்கள் பரிசோதனைக்கு முன்வரலாம். முதல்டோஸ் வழங்கிய ஒரு மாதத்துக்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பு மருந்து போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி உருவாகிறதா என 6 மாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்றனர்.