கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்று கோவை டாக்டர் விளக்கினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியே பிரித்தெடுத்து அதை கொரோனா மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அறிகுறியின்றி கொரோனா பாதித்த பெரும்பாலானவர்கள் குணமடைவதாக கூறப்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது குறித்து கோவை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
பிளாஸ்மா ரத்த தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். உயர்ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது. மேலும் அவர்கள் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமாகியிருக்க வேண்டும். அதாவது தொற்று இல்லை (நெகடிவ்) என்று பரிசோதனை செய்து 14 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். அல்லது தொற்று உறுதியாகி குணமடைந்து 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
பிளாஸ்மா தானம் செய்பவருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அவருடைய ரத்தத்தில் உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படுகிற ஐ.ஜி.ஜி. என்ற இம்யூனோ குளோபுளின் ஜி என்ற நோய் எதிர்ப்பு பொருளான ஆன்டிபாடி இருக்கிறதா? என்று முதலில் பரிசோதனை செய்யப்படும். அந்த ஐ.ஜி.ஜி. இருந்தால் மட்டும் தான் அவரது உடலில் உள்ள ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படும்.
இதற்கான தனி எந்திரம் மூலம் தானம் கொடுப்பவரின் உடலில் இருந்து பிளாஸ்மா மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படும். ரத்தத்தில் மீதி உள்ள வெள்ளை அணுக்கள் போன்றவை எடுக்கப்படாமல் அவரது உடலில் மீண்டும் அந்த எந்திரம் மூலம் திருப்பி செலுத்தப்பட்டு விடும். இவ்வாறு பிரித்தெடுப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
கொரோனா பாதித்து குணமானவரிடம் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள இம்யூனோ குளோபுளின்ஜியை நோயாளியின் உடலில் செலுத்தினால் அது கொரோனா வைரசுக்கு எதிராக செயல்பட்டு அதை அழித்து விடும். அந்த சிகிச்சைக்கு தொடர்ந்து 2 நாட்களுக்கு 200 மி.லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட வேண்டும்.
ஐ.ஜி.ஜி. என்பது ஒருவித ஆன்டிபாடி ஆகும். அதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உயிர் அணுவின் தற்காப்பு பொருள். இந்த ஐ.ஜி.ஜி. உடலில் எப்படி உருவாகிறது என்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியாக கருதப்படும் உயிர் அணுவின் தற்காப்பு பொருளான ஐ.ஜி.ஜி. உருவாகியிருக்கும். அது கொரோனா வைரசை எதிர்த்து செயல்பட்டு அழித்திருக்கும்.
ஏற்கனவே வைரசை கொன்ற அந்த ஆன்டிபாடி மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்துவதின் மூலம் கொரோனா வைரசை அழிக்கும். இந்த ஐ.ஜி.ஜி. எல்லோருடைய உடலிலும் உருவாவதில்லை. அறிகுறியுடன் கொரோனா பாதித்தவர்களின் உடலில் தான் உருவாகும். அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் உடலில் இந்த ஐ.ஜி.ஜி. உருவாவதில்லை. இவ்வாறு ஐ.ஜி.ஜி. ஆன்டிபாடி உருவானவர்களை தேடிப்பிடித்து அவர்களை தான் பிளாஸ்மா தானம் கொடுக்க வலியுறுத்துகிறோம்.
குணமானவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள ஐ.ஜி.ஜி. ஆன்டிபாடி கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தி அதன் மூலம் கொரோனா வைரசை கொல்வது தான் பிளாஸ்மா சிகிச்சை. ஆனால் இந்த சிகிச்சை பெறுபவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதயநோய், சிறுநீரக கோளாறு போன்ற எந்த நோயும் இருக்கக்கூடாது. ஏனென்றால் ஐ.ஜி.ஜி. ஆன்டிபாடி கொரோனா வைரசை மட்டும் தான் கொல்லும்.
மற்ற நோய்களுக்கு அது தீர்வு கொடுக்காது. ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 14 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை பிளாஸ்மா தானம் செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக 2 முதல் 3 முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்கமுடியும். இந்த பிளாஸ்மாவை ஒரு ஆண்டு வரை சேமித்து வைக்க முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும். இதன் மூலம் அந்த நோயாளி கடுமையாக பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

