மு.க.அழகிரிக்கு ஆதரவாக கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து பிரதான கட்சிகளும் தற்போதே தங்களது கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன. ஒருசில கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து கொண்டே மற்ற கட்சிகளுடன் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எல்லாம் ஒருபடி மேலே போய் காங்கிரஸ் கட்சி அதிரடியாக கடந்த 20-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் தேர்தல் முகவர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தி தங்களது தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கி விட்டது.
இதுதவிர பல இடங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை வரைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான, மு.க. அழகிரியை தமிழக அரசியல் களத்திற்கு அழைக்கும் வகையில் கோவை மாநகர் பகுதி முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் கருணாநிதி படத்துடன், அழகிரி படத்தை வைத்து ‘‘அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது, உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர், கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அரசியல் களத்தை விட்டு ஒதுங்கி இருக்கும் அழகிரிக்கு ஆதரவாக கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

