அமெரிக்காவின் தடை-கொழும்பு துறைமுக நகரை நிர்மாணிக்கும் சீன நிறுவனத்துக்கும் சிக்கல்!

373 0

தென்சீனக் கடலில் செயற்கைத் தீவை உருவாக்கி இராணுவமயமாக்கலுக்கு உதவிய குற்றச்சாட்டில் 24 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்துள்ளது.

இவ்வாறு தடையை எதிர்கொள்ளும் 24 சீன நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனியின் (China Harbour Engineering Company-CHEC) தாய் நிறுவனமான சீனா கொம்யூனிகேஷன்ஸ் கென்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியும் (China Communications Construction Company-CCCC) உள்ளடங்குகிறது.

இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம் போன்றவற்றையும் அமைத்திருந்தது.

இந்த பின்னணியில் இதுகுறித்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தத் தடைகள் முற்றிலும் உண்மைக்கு எதிரானது மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சீனா கடுமையாக எதிர்த்தது என்றும், இந்த அறிவிப்பை அமெரிக்கா உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறும் அமெரிக்காவை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக் காலமாக அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டுவருவதாகவும் சீனா, உட்பட்ட பல நட்பு நாடுகள் மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இறையாண்மையுள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனவெறி எதிர்ப்பு, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கொரோனா நெருக்கடி உள்ளிட்ட சவால்களை அமெரிக்கா எதிர்கொள்கின்ற நிலையில் அமெரிக்க நிர்வாகம் அதன் உள் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 70இற்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவத் தளங்களை பராமரிப்பதன் மூலமும், சுமார் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் துருப்புக்களை வெளிநாடுகளில் நிறுத்துவதன் மூலமும், இதற்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவழிப்பதன் மூலமும் உலகத்தையும் பிராந்தியத்தையும் இராணுவமயமாக்குவது அமெரிக்கா தான்.

அந்தவகையில், அமெரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள தென் சீனக் கடல் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி தனது சக்தியை வெளிப்படுத்தவும், இராணுவ ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு பிராந்திய நாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பு நலன்களையும் அமெரிக்கா குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும் கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.