துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

333 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. நாளைய கூட்டத்தில் இந்தப் பிரேரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே. சிவஞானம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, யாழ் மேயர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பரஞ்சோதி, குகபாலன் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளர்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்யும் விடயத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்குத் தெரியாமல் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டமை மூலம் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு நம்பிக்கையீனமாகச் செயற்பட்டுள்ளார் என்று நால்வரும் தமது பிரேரணையில் தெரிவித்திருக்கின்றனர்.

சிவஞானம் சொல்லும் காரணம்

இந்த நிலையில், இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று தம்மால் முன்வைக்கப்படிருப்பதை இன்று காலை உறுதிப்படுத்திய சி.வி.கே.சிவஞானம் ;இந்தப் பிரேரணை வெற்றிபெற வேண்டுமா? இல்லையா? என்பது முக்கியமல்ல. நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் அந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தோம் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பிரேரணை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது தொடர்பான இறுதி முடிவைப் பொதுச் சபைதான் எடுக்க வேண்டும். அவ்வாறான நிலையில் பொதுச் சபையைக் கூட்டுமாறு நாம் கோரிக்கை விடுவோம்” எனவும் சிவஞானம் தெரிவித்தார்.

தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கலையரசன் நியமிக்கப்பட்டது வேறு பிரச்சினை. அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்திலும் நான் அதனைத் தெரிவித்திருந்தேன். அதில் மாற்றங்கள் எதனையும் நாங்கள் கேட்கவில்லை. அது அப்படியே இருக்கட்டும்.
ஆனால், கட்சியின் தலைவரிடம் இது குறித்து எதுவுமே பேசப்படாமல் தன்னிச்சையாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலைமை தொடர்வதையும் எம்மால் அனுமதிக்க முடியாது. அதற்காகத்தான் கட்சிச் செயலாளர் மீது நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்தப் பிரேரணை வெற்றிபெறுகின்றதா? இல்லையா? என்பது பிரச்சினையல்ல. இது தொடர்பில் விவாதிக்கப்பட வேண்டும். அதன் மூலம் தவறு நடந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” எனவும் சிவஞானம் குறிப்பிட்டார்.

பேச்சாளர் பதவி விவகாரம்

இதேவேளையில், கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்ற வேண்டும் என முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை தொடர்பாக நாளைய கூட்டத்தில் விவாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனத் தெரிகின்றது. நாளைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் அவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை.

இது தொடர்பாக வெளிவரும் சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவித்த சிவஞானம், “சுமந்திரனைப் பொறுத்தவரையில் அவர் பாராளுமன்றக் குழுவின் பேச்சாளராக இருந்துள்ளாரே தவிர, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் பேச்சாளர் என கருதிச் செயற்பட்டது தவறு” எனச் சுட்டிக்காட்டினார்.

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அல்ல என்பதையும் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன்” எனவும் சிவஞானம் குறிப்பிட்டார்.

;கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் எம்.பி.யாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன், கூட்டமைப்பின் பேச்சாளர் என்பவர் கட்சி எடுக்கும் முடிவுகளை அறிவிப்பவராகவே இருக்க வேண்டும். அவரே முடிவுகளை எடுத்து அதனை அறிவிப்பவராக இருக்க முடியாது. ஆனால், கடந்த காலங்களில் அவ்வாறான நிலைமைதான் தொடர்ந்தது. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் வலியுறுத்தினார்.

இதேவேளையில், நாளைய கூட்டத்தில், பொதுத் தேர்தலின் போது கூட்டமைப்பு எதிர்கொண்ட பின்னடைவுக்கான காரணம் குறித்து ஆராயப்படுவதுடன், அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு, குழுவும் நியமிக்கப்படும். கட்சியின் அரசியல் குழு ஏற்கனவே இவ்வாறான குழு ஒன்றை நியமிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தது.

எதிர்கால அரசியல் செயற்திட்டங்கள், கட்டமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் நாளைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.