அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு

319 0

அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு

நீண்டநாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இப்போதுதான் அதற்கான தருணம் கைகூடியது. நீங்கள் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எழுதுவதற்கு இதையும்விடப் பொருத்தமான தருணம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை.

உங்களது அன்புத்தந்தையார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு, 1988 டிசம்பரில் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அந்தக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு எவருமே இதுவரையில் வெற்றி பெறவில்லை, வெற்றிபெற முடியவில்லை. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிட்ட போது தந்தையாருக்குப் பிறகு தனயன் தான் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப் போகின்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் என்ற சாதனையைப் படைப்பீர்களோ என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது உங்களால் முடியாமல் போய்விட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்துவரும் கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலகட்டத்தில் இரு தடவைகளைத் தவிர மற்றும்படி எதிர்க்கட்சித் தலைவராகவே பதவி வகித்து வந்திருக்கிறார். அவர் பிரதமர் பதவியை வகித்த மூன்று சந்தர்ப்பங்களிலும் முழுமையாகப் பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்ய முடிந்ததில்லை. அது அவரது விதி. இப்போது புதிய பாராளுமன்றத்தில் அவரது கட்சிக்கு ஒரு ஆசனம் கூடக் கிடைக்காமல் போயிருக்கும் பரிதாபநிலை. தனக்குப் பொருத்தமான எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் அவருக்கு கைக்கெட்டவில்லை. நீங்கள் இப்போது எதிர்க்கட்சித்தலைவராக வந்திருக்கிறீர்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைப் பெறுவதற்கு நீங்கள் அண்மைய பல வருடங்களாகப் பிரயத்தனத்தை மேற்கொண்ட போதிலும்கூட, அதில் உங்களால் வெற்றி பெறமுடியவில்லை. இறுதியில் நீங்கள் புதியதொரு அணியாக ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்து பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு, 54 ஆசனங்களைப் பெற்றிருக்கிறீர்கள். ஐக்கிய தேசியக் கட்சி அதற்குக் கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தைக்கூட நிரப்பமுடியாத நிலையில் கடந்த வியாழக்கிழமை முதன்முதலாகக் கூடிய பாராளுமன்றத்தில் அந்தக் கட்சியின் சார்பில் ஒரு பிரதிநிதிகூட சபைக்குள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாத முதல் பாராளுமன்றமாக இது அமைந்திருக்கிறது. உங்கள் தந்தையாருடன் சேர்ந்து அந்தக் கட்சியை மிகவும் பலம் மிக்கதாக மாற்றியமைத்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதற்கான காரணங்களில் ஒன்று இலங்கையில் அதிக செல்வாக்குக்கொண்ட தனிக்கட்சியாகத் தங்கள் கட்சி விளங்கிவந்ததால், அந்தத் தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்தில் எப்போதுமே கூடுதல் ஆசனங்களைப் பெறுகின்ற கட்சியாக இருக்கும் என்ற அவரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் என்றும் அன்று கூறப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்க ஆரம்பித்த பிறகு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வேறுபல கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணியை அமைத்து, 1956 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்த வேளையில்கூட, 8 ஆசனங்களை மாத்திரமே தக்கவைக்கக்கூடியதாக இருந்த நிலைமையிலும் நாடுபூராகவும் கிடைத்த மொத்த வாக்குகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கத்தையும் விடக்கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு திருமதி. பண்டாரநாயக்க தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணிகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த சந்தர்ப்பங்களிலும் அவர்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மொத்த வாக்குகள் கூடுதலானதாகக் கிடைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றைக்கொண்ட கட்சி விகிதாசாரத்தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையேனும் பெறமுடியவில்லையே!

43 வருடங்களாகத் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்துவந்த ரணில் விக்கிரமசிங்கவினால் கூட, அதுவும் கொழும்பில் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. இத்தகையதொரு தோல்வியை அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். உங்களது ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்களார் வங்கியில் 90 சதவீதத்தைத் தனதாக்கிக்கொண்டுவிட்டது. உங்களை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவிடாமல் ஆரம்பத்திலிருந்தே ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே முடக்கிவைத்திருந்தது நீங்கள் தலைநகரில் போட்டியிட்டால் தனக்குப் பாதிப்பாக இருக்கும் என்பதாலேயே என்று எப்போதும் பேசப்பட்டுவந்தது.

அது இந்தத் தேர்தலில் நிரூபணமாகிவிட்டது. அதுவும் கட்சியின் தலைவராக இருந்துகொண்டுகூட தலைநகரில் வெற்றிபெறமுடியாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே தலைவர் என்ற வரலாற்று அபகீர்த்தியும் அவருக்கு ஏற்படவேண்டியதாயிற்று. ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கையினால் உங்களுக்கு ஏற்படாத திருப்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை உங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று கங்கணம்கட்டி நிற்பவருக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைப் பார்த்து ஏற்பட்டிருக்கக்கூடும்.

என்ன இருந்தாலும் அவர் உங்களது முன்னாள் தலைவரல்லவா? தோல்விகள், பின்னடைவுகளைக் கண்டு கிறுங்காத ஒரு அரசியல்வாதி என்று பெயரெடுத்த அவர் இத்தடவை துவண்டுதான் போயிருப்பார். 1990 களின் ஆரம்பத்தில் உங்களது தந்தையாருக்கு எதிராகக் கட்சிக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் காமினியும் லலித்தும் கிளம்பி அரசியல் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கு திருமதி. பண்டாரநாயக்கவின் கட்சியுடன் சேர்ந்து ‘சதி” செய்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க தந்தையாருடனேயே உறுதியாக நின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தத் தந்தையின் தனயன் தனது அரசியல் அஸ்தமனத்திற்குக் காரணகர்த்தாவாக இருப்பார் என்று விக்கிரமசிங்க ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

என்றாலும் அவர் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்து தொங்கிக்கொண்டிருப்பது அவரைப்போன்று படித்த – பழுத்த அரசியல் தலைவர் ஒருவருக்கு அழகல்ல. இப்போது அவர் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல் வரை கட்சியின் தலைவராக இருந்துவிட்டு, பிறகு இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்குப் பதவியைக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறார். அது நடக்குமோ, இல்லையோ யாரும் நிச்சயமாகக் கூறிவிடமுடியாது. பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த அனர்த்தத்தனமான தோல்வியிலிருந்தும் பாடம் படிக்காமல் இன்னமும்கூட அவர் மாகாணசபைத்தேர்தல்களில் தனது கட்சியினால் சற்று முன்னேற்றகரமான செயற்பாட்டைக் காண்பிக்க முடியுமென்று பத்தாம்பசலித்தனமாக நம்புகிறாரோ தெரியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியைப் பெறுவதற்கு நாட்டங்காட்டப்போவதில்லை என்று ஏற்கனவே நீங்கள் அறிவித்துவிட்டீர்கள். ஆனால் உங்களது அணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையக்கூடிய சாத்தியப்பாடுகள் எதிர்காலத்தில் தோன்றலாம் என்ற நம்பிக்கையை ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பவர்களில் சிலரே வெளிப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விக்கிரமசிங்க கூறிக்கொண்டிருப்பதைப்போன்று மாகாணசபைத்தேர்தல்களுக்குப் பிறகு தலைமைப்பதவியை இளைய தலைவரொருவரிடம் கையளிப்பாரேயானால், அந்த இளையவர் அநேகமாக உங்கள் அணியுடன் இணைவது குறித்து சிந்திப்பது பெரும்பாலும் சாத்தியமானதாகும். ஆனால் விக்கிரமசிங்கவினால் புதிய தலைவராகக் கொண்டுவரப்படப்போகின்ற அந்த இளம் அரசியல்வாதி தலைமைப்பதவியை உங்களுக்குத் தந்து அந்த இணைப்பைச் செய்ய முன்வருவாரா என்பது கேள்விக்குறிதான். அவ்வாறு அவர் தந்தால் இணைந்து அந்தக் கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற உங்கள் நீண்டகாலக்கனவை நனவாக்குவீர்களா?

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அதேவேளை விக்கிரமசிங்க போன்று நீண்டகாலத்திற்கு ; எதிர்க்கட்சித்தலைவராக மாத்திரமே இருந்து விடக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க சரியான அரசியல் நோக்கு தேவை. வெறுமனே சிங்கள பௌத்த பெரும்பான்மை தேசியவாத அரசியல்போக்கு உங்களுக்கும் மீட்சிதருமென்று நம்பாதீர்கள். ஏனென்றால் என்னதான் இருந்தாலும், இன்று பெரும்பான்மைத் தேசியவாத அரசியல் ஆதிக்கம். ராஜபக்ஷாக்களின் அசைக்க முடியாத கோட்டையாக மாறிவிட்டது. சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஆரோக்கியமான மாற்று அரசியல் மாற்றம் குறித்து சிந்தியுங்கள். வணக்கம்.

இப்படிக்கு,
ஊர்சுற்றி