வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டத்திற்கு பூரண ஆதரவு-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி       

401 0

 

23.08.2020
ஊடக அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு

எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றயதினம் வடக்குக் கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் யுத்த முடிவில் சரணடைந்த மற்று உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவிக்கின்றது.

கடந்த 2015 செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் உள்ளக விசாரணையே வலியுறுத்தப்பட்டது, அதனால் ஒருபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதனையும், காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) என்பது வெறும்கண்துடைப்பு நாடகம் என்பதனையும் பாதிக்கப்பட்ட உறவுகள் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டி, உள்ளக விசாரணைப் பொறிமுறை மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பவற்றை அடியோடு நிராகரித்தனர். அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் தொடர்பாக முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற குற்றவியல் நீதி விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்ற கோரிக்கையானது கடந்த ஆறுவருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும் அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளக விசாரணைக்கு சந்தற்பம் வழங்கப்பட்டது மட்டுமன்றி தொடர்ச்சியான கால நீடிப்புக்களும் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுக்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்களுக்கு பொறுப்பாகவிருந்தவர்கள் இன்று நாட்டின் ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால நீடிப்பு 2021 மார்ச் வரை தொடர அனுதிப்பது காலத்தைக் கடத்தும் நடவடிக்கை மட்டுமேயாகும்.

எனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பை உடனடியாக இரத்துச் செய்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வடக்கு கிழக்கில் நடாத்தப்படவுள்ள மேற்படி போராட்டங்களுக்கு அனைத்து பொது அமைப்புக்களையும், பொது மக்களையும் ஆதரவு வழங்குமாறு கோருகின்றோம்.

நன்றகஜேந்திரகுமார் பொன்னம்பலம்                                                                                                              செல்வராசா கஜேந்திரன்
தலைவர்                                                                                                                                                                       பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி                                                                                                                         தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி