இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் அமெரிக்கா

260 0

இலங்கையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களுக்காக 6 மில்லியன் டொலர் உதவியை வழங்கியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் உதவித் தொகையில் பொருளாதார நெருக்கடிக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக சேவைகளை அதிகரிக்கவும், சமூக ஒத்திசைவுக்கான குறிப்பிட்ட அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும் எதிர்மறையான பொருளாதார தாக்கங்களைத் தணிக்கவும் மிகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைப்புகளுக்கும் தொற்று கண்டுபிடிப்பு மற்றும் கண்காணிப்பை செயற்படுத்தவும் 1.3 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து சுமார் 1.6 பில்லியன் டொலரை சர்வதேச அபிவிருத்தி, அவசர சுகாதாரம், மனிதாபிமான, பொருளாதார மற்றும் மேம்பாட்டு உதவிகளுக்காக அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.