இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

405 0

இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை அறிமுகம் செய்துள்ளது. இயங்கலையில் (ONLINE) இந்தத் தேர்வு நிகழ்த்தப்படுவதோடு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் உடனுக்குடன் கிடைக்கக்கூடியவகையில்  இத்தேர்வு அமைந்திருப்பது சிறப்பாகும்.

முதல்கட்டமாக கறுப்பு யூலையை அடிப்படையாகக் கொண்ட இணையவழித் தேர்வை, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்படும் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இளந்தலைமுறையினர் செய்துள்ளனர். இதில் இராசலிங்கம் றொஷான் எனும் இளந்தலைமுறை மாணவர் 100 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்களுக்கும், தொடர்ந்து அனைத்துத் தரப்பினரிடையேயும் இந்தத் தேர்வை விரிவுபடுத்த தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் எண்ணியுள்ளது. அடுத்த கட்டமாகத் தியாகதீபம் திலீபன் தொடர்பான இணையவழித்தேர்வை செப்டம்பர் மாதம்  நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.

தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியில் பங்கெடுத்த தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இளையோர் தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 ஐ நிறைவு செய்த மாணவர்கள் என்பதோடு, அண்மைக்காலமாக இப்பட்டப்படிப்பை மேற்கொள்ள இளந்தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கிளிச்சி தமிழ்ச்சோலையில் இருந்து 7 இளந்தலைமுறை மாணவர்கள் பட்டப்படிப்பை தொடங்கியுள்ள நிலையில் லா கூர்நேவ் தமிழ்ச்சோலையிருந்து  6 மாணவர்கள் அடுத்த பருவத்தேர்விற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.மொத்தமாக அறுபதிற்கு மேற்பட்டோர்  இந்தப்பருவத்தேர்வில் தோற்றியுள்ள நிலையில் 50 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பிரான்சில் பிறந்த இளந்தலைமுறையினர் என்பது கூடுதல் செய்தி.

கோவிட் 19 நெருக்கடியிலும் மாணவர்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தபடி ஆகஸ்டு மாதம் முதலாம் நாள் முதல் 16 ஆம் நாள் வரை நடைபெற்ற  தேர்வுகளில் மிகச்சிறப்பாகத் தோற்றியுள்ளதோடு நுழைவுத் தேர்வில் பத்மநாதன் ரிஜிதா எனும் மாணவி இணையவழித் தேர்வில் 100 புள்ளிகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.