வீட்டுக்குள் பூகம்பம்தான்!

61 0

பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்!

கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது.

தேசியப் பட்டியல் மூலமாக வருவதற்கு முதலில் திட்டமிட்டிருந்த சம்பந்தன், அந்த நிலைப்பாட்டை மாற்றி, திருமலையில் போட்டியிடத் தீர்மானித்த போது ஒரு நிபந்தனையை பகிரங்கமாக அறிவித்தார். தான் வெற்றிபெற்றால் குகதாசன் தேசியப்பட்டியல் மூலமாக எம்.பி.யாக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. தான் தேசியப் பட்டியில் வந்து குகதாசனை திருமலையில் தலைமை வேட்பாளராக்குவதுதான் சம்பந்தனின் முன்னைய திட்டமாக இருந்தது. ஆனால், சம்பந்தன் களமிறங்கினால்தான் திருமலையைப் பாதுகாக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்திச் சொன்னபோது அவர் தனது முன்னைய திட்டத்தை மாற்றிக்கொண்டார். எப்படியாவது குகதாசனை எம்.பி.யாக்க வேண்டும் என்ற விருப்பத்திலேயே அந்த நிபந்தனையை அவர் முன்வைத்தார்.

முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அம்பிகா சற்குருநாதனுக்கு தேசியப் பட்டியலில் முதலாவது இடமளிக்கப்பட வேண்டும் என்பது சுமந்திரனின் தெரிவாக இருந்தது. இதனைவிட, கே.வி.தவராஜாவின் பெயரும் அப்போது முன்மொழியப்பட்டிருந்தது. அது மாவையின் விருப்பமாக இருந்திருக்கலாம். இந்த பெயர்கள் குறித்த சர்ச்சையுடன்தான் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது, தேர்தல் முடிவுகள் புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. பட்டியிலுள்ள பெயர்கள் கைவிடப்பட்டு, புதிய பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜா தேர்தலில் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அவரை தேசியப் பட்டியல் எம்.பி. ஆக்க வேண்டும் என ஒரு குழு களத்தில்
இறங்கியுள்ளது.

இந்தக் குழுவின் சார்பில் சி.வி.கே. சிவஞானம் உட்பட சிலர் சனிக்கிழமை கால அவசரமாக திருமலை சென்று சம்பந்தனை சந்தித்தது. மாவை தேசியப் பட்டியல் எம்.பி. ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். சம்பந்தன் அதற்கு இணங்கியதாகச் சொல்லப்படுகின்றது.

இதனை அறிந்தகொண்ட நிலையில், சனிக்கிழமை இரவு திருமலை விரைந்த சுமந்திரனும், சிறீதரனும் மற்றொரு கோரிக்கை சம்பந்தனிடம் முன்வைத்தார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அம்பாறைக்கு ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்பதால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கலையரசனை தேசியப் பட்டியல் எம்.பி. ஆக்குங்கள் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அவர்களின் வாதங்கயைடுத்து அதனை சம்பந்தன் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.

அது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்துக்கும் அறிவித்த சம்பந்தன், இது குறித்த கடிதத்தைத் தயாரித்து தேர்தல் ஆணைக் குழுவுக்கு அனுப்புமாறு கூறியிருக்கின்றார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான கடிதங்கள் கட்சியின் செயலாளரினால் அனுப்பப்படுவதால் அதனை அவர் செய்ததாகச் சொல்லப்படுகின்றது.

கலையரசனையும் அருகில் வைத்துக்கொண்டு தேசியப்பட்டியல் விபரத்தை துரைராஜசிங்கம் அறிவித்த போது..
ஞாயிறு காலை இதனை துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற தமிழரசு யாழ். கிளையின் கூட்டத்தில் இதற்கு முரணான தீர்மானம் எடுக்கப்பட்டது. மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் உடனடியாக சம்பந்தனுக்கும் அனுப்பப்பட்டது.

அதேவேளையில், தமிழரசுக் கட்சித் தலைவர் என்ற முறையில் மாவை சேனாதிராஜாவிடம் ஆலோசனை நடத்தாமல், அவரது சம்மதத்தையும் பெறாமல் தேசியப் பட்டியல் விபரம் துரைராஜசிங்கத்தினால் வெளியிடப்பட்டமை மாவையின் ஆதரவாளர்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ என்பவற்றின் தலைவர்களுடன் கூட ஆலோசனை நடத்தாமல் அவசரமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து சம்பந்தனிடம் தமது கடுமையான ஆட்சேபனைளைத் தெரிவித்ததுடன், அந்த நியமனத்தை இடைநிறுத்துமாறும் வலியுறுத்தியிருந்தார்கள். இல்லையெனில் கடுமையான ஒரு நிலைப்பாட்டை தாம் எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

இந்தப் பின்னணியில் உடனடியாக கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டாம் என துரைராஜசிங்கத்துக்குச் சொல்லப்பட்டதாக ஒரு தகவல். ஞாயிறு மாலை வரையில் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தகவல் இல்லை. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதிக்கு முன்னதாக தேசியப் பட்டியல் விபரங்கள் அனுப்பப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. அதனால், அடுத்த 3, 4 தினங்கள் வீட்டுக்குள் பூகம்பமாகததான் இருக்கப்போகின்றது.

தமிழரசுக் கட்சித் தலைவர் என்ற முறையில், இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்ள மாவை தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது. சம்பந்தனும் அவ்வாறு மாவையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வதை விரும்புவதாகவும் தகவல். இந்த விடயத்தில் பங்காளிக் கட்சிகளும் மாவையை ஆதரிக்கின்றன.

மாவையை ஓரங்கட்டி தமிழரசுத் தலைமையைக் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே கலையரன் பெயர் அவசரமாக – இரகசியமாக முன்வைக்கப்பட்டதாக மாவையின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள். அதனால், கட்சியின் தலைமையை விட்டுவிட வேண்டாம் என ஆதரவாளர்கள் மாவைக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள்.
;தலைமையைப் பொறுப்பேற்கத் தயார் என்ற சிறிதரனின் அறிவிப்புக்கு மாவை சற்று சீற்றமாகப் பதிலளித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி தலைமையைக் கைப்பற்றிவிட முடியாது ; என மாவை அதற்கு உடனடியாகவே பதிலளித்திருந்தார்.

வடமராட்சியில் சுமந்தரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலும் மாவை மீது குற்றஞ்சாட்டியிருந்தார். “கூட்டமைப்பின் தோல்விக்கு தமிழரசுக் கட்சித் தலைமைதான் காரணம் கட்சித் தலைவர் படுதோல்வியடைந்திருக்கின்றார். அதுவும் கொஞ்ச வாக்குகளால் அல்ல. பெருமளவு வாக்குகளால்…” என சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். மாவை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எனக் காட்டிக்கொள்வது இந்த உரையின் நோக்கம் என மாவையின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள்.

இந்தப் பின்னணியில் கட்சித் தலைமைக்கான போட்டி இப்போது, தேசியப் பட்டியல் விடயத்தில் வீட்டுக்குள் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கின்றது.

அரவிந்தன்