புதிய மலையகம் உருவாகும்- ஜீவன்

317 0

புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தனக்கு பேராதரவை வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் தனக்குக் கிடைத்த வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் கொட்டகலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றி வெற்றிபெறவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தந்தையும் இதனையே கூறியிருந்தார். அந்தவகையில் மாவட்டத்தைப் கைப்பற்றி விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலையளிக்கின்றது. ஆனால் எனது தந்தையை நேசித்த மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். அது போதும்.

தேர்தல் காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபையன் என்றுகூட என்னை தாக்கி பேசியிருந்தனர். ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களும், மக்களும் பேராதரவை வழங்கியுள்ளனர்.

புதியதொரு மலையகத்தை உருவாக்க முடியும் என மக்கள் நம்பியுள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். சொல்லில் அல்லாமல் எனது சேவைகளை செயலில் காட்டுவதற்கே விரும்புகின்றேன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களித்த, அதேபோல் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொள்கை அடிப்படையிலேயே எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு இடமில்லை. வெற்றியின் பங்காளியாக எமது மக்களும் மாறியுள்ளனர். எனவே, மாற்றத்தை நோக்கி பயணிப்போம்” என்றார்.