மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

514 0

kuriyeedu-logo‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ளதில் உவகை ஊற்றெடுக்கின்றது. அந்த பாடல் வரிகளுக்குள்ளாகவே விடுதலைப் போராட்டக் களம் விரிவடைந்து செல்கின்றது.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வணங்கா மண் வன்னியிலுள்ள கற்சிலைமடு பகுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர் முடியுரிமை 1980 களில் மீண்டும் தமிழர்களின் கைகளில் கிட்டய போதிலும் எம் இனத்துடனே உடன்பிறந்த வரமாகத் தொடர்ந்தே வரும் துரோகத்தினால் 2009 மே-18 இல் அதே வணங்கா மண் வன்னியிலுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் இரத்த சரித்திரத்திரத்தோடு மௌனிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் பண்டார வன்னியன் கைகளில் இருந்த வீர வாள் கற்சிலைமடுவில் வீழ்த்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டிருந்த தமிழர் இறையாண்மை, தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கைகளில் ஏந்திய துப்பாக்கியின் சுடு நிழலில் மீளவும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் ஆயுத மௌனிப்புடன் தமிழர்களின் இறையாண்மை சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து அடிமைகொள்ளும் அடங்காத மண்ணாசையுடன் படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஏந்திவந்த, வாளுக்கு வாள், வேலுக்கு வேல், வில்லுக்கு வில், துப்பாக்கிக்கு துப்பாக்கி என காலத்திற்கு காலம் தமிழர்களும் ஏந்திய போர்க்கருவிகளின் நிழலில்தான் தமிழர் இறையாண்மை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதென்பது வரலாற்றுப் பேருண்மையாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவானதன் பின்னரே, தமிழர் நிலப்பறிப்பு தடுக்கப்பட்டது. அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழர் தேசத்து எல்லைகள் மீண்டும் உயிர் பெற்றது. இந்தப் பின்னணியில் தான் நூற்றாண்டு கடந்து குனிந்தே இருந்த தமிழர்களின் தலைகள் நிமிர்ந்தன. இவ்வாறு உலகத் தமிழர்களின் தலை நிமிர்விற்கு காரணமாகத் திகழ்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் வெளிப்படுத்தப்பட்ட ‘மாவீரமே’ ஆகும்.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் இலட்சியம் சுமந்து அந்த இலட்சியத்திற்காகவே தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் உயிர்த்தியாகத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது தமிழர் இறையாண்மை.

சுதந்திர தமிழீழம் என்ற இலட்சியத்திற்கான விடுதலைப் போரில் மாண்ட வீரர்கள் கனவு நிச்சயம் ஒரு நாள் பலிக்கும். ஒருவரல்ல இருவரல்ல நாற்பதாயிரத்திற்கும் மேலான இலட்சிய வேங்கைகள் தம்முயிரை விடுதலைப் பெரு விருட்சத்திற்கு உரமாக்கியுள்ளார்கள். அவர்கள் கனவு நிச்சயம் நனவாவது திண்ணம்.

அப்பேற்பட்ட மகத்துவமான மாவீரர்களை எமது இதயக் கோவில்களில் இருத்தி பூசிக்கும் புனித நாளாகிய நவம்பர்-27 இல் எத்தடை வரினும் அவற்றைத் தகர்த்தெறிந்து வணங்குவோம். மாவீரர்களை வழிபடும் வீர மரபானது அவர்கள் கொண்ட இலட்சியத்தின்பால் எம்மை எழுச்சிகொள்ள வைக்கும் உந்துசக்தியாகவே திகழ்கின்றது.

அந்தவகையில் காலத்தின் காத்திருப்பிற்குள் மௌனிக்கப்பட்ட எமது விடுதலைப் போராட்டம் மீண்டும் பேரெழுச்சி கொண்டு விடுதலை வேள்வியமைக்க நாம் ஏற்றும் தீபங்கள் ஒளிப்பிளம்பாக மாறி வழியமைக்கட்டும்.

எமக்குள் இருக்கும் நான் பெரிது.. நீ பெரிது.. என்ற தன்முனைப்பினை தூர வீசியெறிந்து, எதிரிகளும் துரோகிகளும் தூக்கிப்போடும் எலும்புத் துண்டுகளுக்காய் வாள் மற்றும் துப்பாக்கி கொண்டு உயிர்பலியெடுக்கும் இரண்டகத்தினை கைவிட்டு சரித்திர நாயகர்களைப் போற்றிப் பூசிக்கும் புனிதக் கடமையாற்றுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

“தமிழீழம் என்றோ ஒருநாள் உதயமாவது திண்ணம், எமது மக்களாகிய நீங்களும் விடிவு பெறுவது திண்ணம், சமதர்ம சமூகமாக எமது நாடு வளங்கொழிப்பது திண்ணம், இந்த நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையில் வீறுநடை போடுவோம்.” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தீர்க்கதரிசனமான கூற்றை எமக்கான அறைகூவலாக ஏற்று மாண்ட வீரர்களின் கனவை நனவாக்கி மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண்ணை குளிப்பாட்ட இறுதிவரை உறுதியோடு போராடுவோம் என உறுதியேற்போமாக.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

ஆசிரியர்.
குறியீடு இணையம்.