எமக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நினைவேந்துவதை தடுப்பது மனித விழுமியங்களுக்கு முரனானது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

439 0

logo-ma-avaiஉலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து தம் சார்ந்த இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி நினைவேந்துவதை தடுக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது மனித விழுமியங்களுக்கு முரணானதாகும்.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இனவெறியாட்டத்தில் இருந்து எமது தாயக மண்ணையும், மக்களையும் காத்து நின்ற மாவீரர்கள் என்றென்றும் பூசிக்கப்பட வேண்டியவர்கள். அந்தந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் நினைவு நாட்களை கொண்டாடுவது உலக வழக்கமாகும்.

அந்த வகையில், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறித் தாண்டவத்திலிருந்து தமிழீழ மண்ணையும் எமது மக்களையும் காத்து சுதந்திர தமிழீழம் எனும் இலட்சியத்திற்காக அதி உன்னதமான தமது உயிரையே அர்ப்பணித்து மண்ணோடு மண்ணாகவும், காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், வானோடு வானாகவும் கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் எம்மினத்தின் காவல்தெய்வங்களுக்காக உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாளில் விடுதலை ஒளி ஏற்றுவோம்.

விடுதலைக்காகப் போராடிக்கொண்டே அந்த விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினவேந்தல் நிகழ்வுகளை உலகெங்கிலும் குறித்த நேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் முன்னெடுத்துவரும் ஒரே இனமென்ற பெருமைக்குரிய நாம் எதிர்ப்புகளையும் தடைகளையும் ஒரு பொருட்டாகக் கருதாது சுதந்திர தமிழீழ விடுதலைக்காக விதையாகிப்போன மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆத்மாவாகத் திகழ்ந்து வரும் மாவீரர்கள் துயில் கொள்ளும் கல்லறைகளை இடித்து அழித்தும், துயிலுமில்லங்களை அழித்தும் தரைமட்டமாக்கியதுடன் அவ்விடத்தில் இராணுவத் தளங்களை அமைத்தும் சிதைவுகளை அள்ளியெடுத்துச்சென்று அழித்தும் அழிச்சாட்டியம் செய்த சிங்கள அரசு எமது நினைவுகளில் இருந்தும் அவர்களை வெளியேற்றவே ஆயுதமுனையில் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றது.

மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்கா அரசுதரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையானது மனித விழுமியங்களுக்கு முரனான மிலேச்சத்தனமாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழர் தாயகத்தில் சுதந்திரமான முறையில் எமக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நினைவேந்துவதற்கான சூழலை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’