வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை!

162 0

2020 பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெற்று மறுநாளே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மையின வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்யும் போது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ தலையீடு இடம்பெறாது. இதற்கான உறுதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குகிறது. இவ்வாறு ஏதேனும் சம்வபங்கள் இடம்பெற்றால் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.

கொவிட்-19 பரவல் காரணமாக வழமையைப் போன்றல்லாமல் புதியதொரு வழமையான சூழலில் தேர்தல் நடைபெறுவதால் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே இம்முறை தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்குபற்றவில்லை என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த நேர்காணலின் முழு விபரம் வருமாறு :

கேள்வி :- அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கிறீர்களா?

பதில் – பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் அமைதியானதாகவும் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான முழுமையாக பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இது வரையில் பாரிய வன்முறை சம்பவங்கள் நாட்டில் இடத்திலும் பதிவாகவில்லை. எனினும் எமக்கு இது வரையில் கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் மிக மோசமான முறைப்பாடு மோட்டார் சைக்கிள் பேரணி சென்றமையாகும்.

புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (31) வவுனியா மற்றும் முல்லைதீவிலும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான இடங்களுக்கு நாம் எஸ்.டி.எப் அனுப்பியேனும் அவர்களை கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே எவ்வித பயமும் இன்றி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தந்து வாக்கினை பதிவு செய்யுமாறு நாம் மக்களுக்கு அறியத்தருகின்றோம். வன்முறைகள் அல்லது இவ்வாறான சம்பவங்கள் குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை.

எனினும் எமது அறிவித்தல் கோரிக்கை என்பவற்றைத் தாண்டி சட்டங்களை தொடர்ச்சியாக மீறிக் கொண்டிருக்கும் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்க வேண்டாம் என்று நாம் வலியுறுத்துகின்றோம். எனவே தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் அவதானிக்கும் எந்த சந்தப்பத்திலும் எமக்கு அறியத்தருமாறு கோருகின்றோம்.

கேள்வி :-கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பான தேர்தலுக்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ?

பதில் :- வாக்களிப்பு நிலையங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட்-19 பரவாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். தேர்தல் அலுவலகங்களில் மாத்திரமல்ல. வாக்களிப்பு நிலையங்களில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புகையிரதம் , பேரூந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தும் போது அல்லது பொது சந்தைகள் அல்லது பல்பொருள் அங்காடிகள் என பொது மக்கள் பாரியளவு ஒன்று கூடும் இடங்களை விட வாக்களிப்பு நிலையங்கள் ஆபத்தானது அல்லது. இங்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கைககளை சுத்தமாகக் கழுவிய பின்னரே வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் செனிடைசர் வழங்கப்படும். ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவதோடு முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையத்திற்கும் சென்ற பின்னர் மீண்டும் செனிடைசர் வழங்கப்படும். வாக்களித்து வெளியில் வரும் போதும் செனிடைசர் வழங்கப்படும். எனவே மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.

கேள்வி : நீங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தீர்கள். இதன் போது இராணுவ பிரசன்னம் குறித்து உங்களிடம் முறைப்பாடளிக்கப்பட்டது. அதன் போது வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களின் வாக்களிப்பில் இராணுவத் தலையீடு இருக்காது என்று கூறினீர்களல்லவா ?

பதில் :- வடக்கு , கிழக்கிற்கு சென்றிருந்த போது அங்கு வாக்களிப்பில் இராணுவ தலையீடு அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் இராணுவத்திடம் நாம் கலந்துரையாடினோம். யாழ் கட்டளை அதிகாரியுடன் விஷேடமாக இது பற்றி பேசியுள்ளோம். எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு இடம்பெறப் போவதில்லை. அவர்கள் வாக்காளர்களுக்கு எவ்வித்திலும் அழுத்தம் பிரயோகிக்க மாட்டார்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாகக் கூறுகிறது. ‘ வாருங்கள். பயமின்றி வாக்கினைகப் பதிவு செய்யுங்கள் ‘ என்று மக்களிடம் கூறுகின்றோம்.

கேள்வி :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அல்லது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடந்த வாரம் கூறியிருந்தீர்களல்லவா ?

பதில் : தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக அதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ஆனால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து வீடுகளுக்குச் சென்று அங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். காரணம் அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறெனில் அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் பாதுகாப்பிற்காகவே அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களேயன்றி தொற்று உறுதிப்படுத்தப்பட்டதற்காக அல்ல. எனவே இவ்வாறானவர்கள் 4 – 5 மணிக்கு இடையில் வருகை தந்து வாக்களிக்க முடியும். சாதாரண வாக்களிப்பு நிலையங்களிலேயே குறித்த நேரத்தில் மாத்திரம் அவர்கள் வாக்களிக்க முடியும். எனினும் இவர்கள் ஏனைய வாக்காளர்களை விட அதிகமாக கிருமி நீக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

கேள்வி :- அவ்வாறெனில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இம்முறை வாக்களிப்போவதில்லையா ?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 ஆம் திகதி வரை உள்ளவர்களுக்கு அதாவது 5 ஆம் திகதியன்றும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாதவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பாரிய எண்ணிக்கையில் இல்லை. மிகக் குறைந்தளவானோரே உள்ளனர்.

கேள்வி – பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்குபற்றவுள்ளார்களா ?  கண்காணிப்பிற்கான ஏற்பாடு;கள் எவ்வாறு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது ?

பதில் :- இல்லை. இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்கள் யாரும் வருகை தரவில்லை. எனினும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் (பயிற்சி பெருபவர்கள்) மிகக் குறைந்தளவானோர் கண்காணிப்பில் ஈடுபடுவர். அவர்களுடன் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இணைந்து செயற்படும். இதில் எண்ணிக்கையைக் கூறுவதை விட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.

கேள்வி :- வழமையைப் போன்றல்லாமல் ஏன் தேர்தல் முடிவுகளை அடுத்த நாள் வெளியிட தீர்மானித்தீர்கள் ?

பதில் :-இல்லை. தேர்தல் முடிந்தவுடன் எம்மால் வாக்கெண்னும் பணிகளை ஆரம்பிக்க முடியாது. காரணம் வாக்கெண்னும் நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகளை எடுத்து வருவதற்கும் இரவு 10 மணியாகலாம். இவ்வாறு ஓய்வின்றி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை அதே களைப்புடன் வாக்கெண்னும் பணிகளில் ஈடுபடுத்த முடியாது. வாக்கெடுப்பின் போதும் அதிகாரிகள் ஓரளவு அருகருகிலேயே இருப்பார்கள். வாக்கெண்னும் போதும் ஒரு அறைக்குள் இவ்வாறு தான் இருப்பார்கள். எனவேதான் கொவிட்-19 க்கு மத்தியில் பாதுகாப்பின் நிமித்தம் அடுத்த நாள் வாக்கெண்னும் பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

கேள்வி :- அவ்வாறெனில் வாக்கு பெட்டிகளை ஒரு நாள் முழு இரவும் வைத்திருக்க வேண்டியேற்படும். இவ்வாறு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் வாக்கு பெட்டிக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழக்கூடுமல்லவா ? இந்நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படு;த்துவீர்கள் ?

பதில்:- வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்னும் நிலையங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் பாதுகாப்பு பற்றி எவ்வித பிரச்சினையும் இல்லை. முவர்களை வரவழைத்து பெரிய பெட்டிகளில் இட்டு சீல் வைத்து தான் அறைகளில் வைக்கப்படும். எனவே இவ்விடயத்தில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி :- பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும். தற்போதும் மூன்று மாதங்களுக்கும் அதிக காலம் நாட்டில் பாராளுமன்றமொன்று இல்லாத ஆட்சியே நடைபெற்றது. எனவே புதிய பாராளுமன்ற அமர்வு விரைவாக இடம்பெற வேண்டும் என்று அல்லது எந்த தினத்தில் இம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவினால் ஏதேனும் பரிந்துரைகளை முன்வைக்க முடியுமா ?

பதில் : இல்லை. எம்மால் அதனைச் செய்ய முடியாது. அது ஜனாதிபதிக்கு மாத்திரமே உரிய பொறுப்பும் அதிகாரமுமாகும்

கேள்வி :- பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமல்லவா ? அது குறித்து ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :- சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும். எனினும் அப்போது தற்போதை ஆணைக்கு இயங்காது. காரணம் புதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் குறித்த சட்டத்தை உருவாக்கி தேர்தலை நடத்துவதற்கு மூன்று மாத காலமேனும் செல்லும். ஆனால் எமது பதவி காலம் நவம்பர் 13 ஆம் திகதி நிறைவடைகிறது. அதன் பின்னர் வேறு உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவே காணப்படும்.

கேள்வி : தற்போது பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகளவான போலி செய்திகளும் வெறுக்கத்தக்க பேச்சுகளும் பதிவிடப்படுகின்றன. அவை அதிகவாக பகிரப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக ஆணைக்குழு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது ?

பதில் : வெறுக்கத்தக்க பேச்சுக்கள் , போலி செய்திகள் குறித்து ஆணைக்குழுவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை ஆராய்ந்து பேஸ் நிறுவனத்திற்கு கூறி அவ்வாறான பதிவுகள் நிறுவனத்தினாலேயே நீக்கப்படுகின்றன.

கேள்வி- இம்முறை தேர்தலுக்கான மொத்த செலவு ?

பதில் : வழமைக்கு மாறாக புதியதொரு வழமையான சூழலில் கொவிட்-19 க்கு மத்தியில் தேர்தல் இடம்பெறுகின்றமையால் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மொத்த தேர்தல் செலவு 1000 கோடியாகும்.

கேள்வி :- முழுமையான இறுதி முடிவை எப்போது எதிர்பார்க்கலாம் ?

பதில் :- 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு வாக்கெண்னும் பணிகள் ஆரம்பிக்கப்படும். அதற்கயைம முழு நாட்டிலும் வெற்றி பெற்றுள்ளவர்கள் தொடர்பான இறுதியான முடிவை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கேனும் வழங்க எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் 7 ஆம் திகதி காலை 7 மணி வரை நேரம் அதிகரிக்கக் கூடும் .