எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

277 0
SAMSUNG CAMERA PICTURES

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்  தெரிவித்துள்ளார்.

புளியங்கூடல் பகுதியில்  இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரையில் உரையாற்றும் போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது.  கல்வி சொத்தை பறிக்கிறார்கள். நான் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறும் போது 100 வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர்.

ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கற்கின்றார்கள் ? கடல் வளத்தை யார் சூறையாடுகின்றார்கள் ? இவ்வாறாக எல்லாமே பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலே எம் இனத்தின் மீதான அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகளை இல்லாதாது ஒழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கிறோம்.

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும்.

அது மட்டுமின்றி எமது வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும். வடமராட்சி தொடக்கம் மண் கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.

எனவே தான் கேட்கிறோம் எம்மினத்தின் மீது குற்றங்களை புரிந்தவர்களையும் , வளங்களை சூறையாடுபவர்களையும் தண்டிக்க வேண்டும் என போராடும் எங்களுடன் நீங்களும் அணி திரள வேண்டும் என கேட்கிறோம். குற்றவாளிகளை தண்டிக்க எங்களுக்கு அங்கீகாரத்தை தந்து எம்முடன் அணி திரண்டு வாருங்கள்” என தெரிவித்தார்.