பேரவைத் தேர்தலில் இணைந்து பயணிக்க இபிஎஸ், ஓபிஎஸ் தயக்கம்- முடிவுக்கு வருகிறதா அதிமுக – பாஜக கூட்டணி ?

259 0

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர அதிமுக விரும்பாததால் அக்கூட்டணி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நண்பர்களாக இருந்தபோதும் கடந்த 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோடியும், அன்றைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் எவ்வளவோ முயன்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமுடியவில்லை. பாஜக தனித்துப்போட்டியிட்டு பெரும் தோல்வியைச் சந்தித்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காட்சிகள் மாறின. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக ஆதரவு நிலையை அதிமுக எடுத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் பாஜகவை கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொண்டது.

நாடு முழுவதும் 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் மட்டுமே அதிமுக வென்றது. அதேநேரத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 13 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

தமிழகத்தில் வீசிய மோடி எதிர்ப்பு அலையால்தான் மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டது என்று அதிமுகவினர் வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இதனால் அதிமுக – பாஜக இடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவும், மாநிலங்களவையில் அதிமுகவின் தயவு தேவை என்பதால் பாஜகவும் கூட்டணியைத்தொடர்கின்றன.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிஅறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

2004, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரும் தோல்வியைச் சந்தித்ததால் வரும் பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. ஒருவரிடம் பேசியபோது, ‘‘பாஜகவுடன் கூட்டணி அமைக்க முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவருமே தயங்குவது உண்மைதான். தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு வெறுப்புணர்வை திமுக கட்டமைத்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே உள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்பது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு சென்றுவிடும். இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிட்டால் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவர்கள் விரும்பவில்லை.’’ என்றார்.

அதிமுகவின் நடவடிக்கைகளை பாஜகவும் உணர்ந்தே உள்ளது.எனவே அதிமுக, திமுகவுடன் இணைய வாய்ப்பில்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிட அக்கட்சி தயாராகி வருவதாக தமிழக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.