ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.

