தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விநியோகிக்கும் மாதிரி வாக்குச்சீட்டுகளில் மோசடி

241 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சரவணபவன் அவர்கள் தனது படம், பெயர் அச்சிட்டு விநியோகித்து வரும் மாதிரி வாக்குச்சீட்டுகளில் எங்களது சுயேச்சைக்குழு – 8 இன் மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக வாழைப்பழச் சின்னத்தை அச்சிட்டு மோசடியான முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இவர்களது தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2020) ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் வாக்குச்சீட்டு மாதிரிகளையும் காண்பித்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

சுயேச்சைகளுக்கு வாக்களிக்க வேண்டாம், அந்த வாக்குகள் வீணாகிவிடும் என்று பெருங்கட்சிகளின் வேட்பாளர்கள் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். நான் மதிக்கின்ற விக்னேஸ்வரன் ஐயா கூட அவ்வாறு பேசியிருக்கிறார். அவரது கட்சியும் அவரது கூட்டில் இணைந்திருக்கின்ற அனந்தி அம்மையார், ஸ்ரீகாந்தா அவர்களது கட்சிகள் கூட இன்னும் தேர்தல் ஆணையத்தில் கட்சிகளாகப் பதியப்படவில்லை.

நாங்கள் பதிவுக்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருப்பதைப் போலவே அவர்களும் விண்ணப்பித்திருக்கிறார்கள். வேறொரு கட்சி தனது பெயரை மாற்றியபின்னர் அதனுடன் இணைந்து போட்டியிடுகின்ற இவர்கள் அந்தக் கட்சி பெயரை மாற்றாமல் இருந்திருந்தால் சுயேச்சைகளாகத்தான் இந்தத் தேர்தலை
எதிர்கொள்ளவேண்டி வந்திருக்கும்.

நாங்கள் மழைக்காளான்கள் போன்று தேர்தல் காலத்தில் தோன்றி மறைகின்ற சுயேச்சைகள் அல்லர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிவருகின்ற கட்சி. எங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

எங்களது பரந்த வலையமைப்பைக் கண்டு இவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால்தான் சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று மேடைக்கு மேடை வேண்டுவதோடு உச்சக்கட்ட இழிநிலை அரசியலின் வெளிப்பாடாக மாதிரி வாக்குச்சீட்டில் வாக்காளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் நோக்கோடு மாம்பழம் சின்னத்தை நீக்கி வாழைப்பழத்தை அச்சிட்டு விநியோகிக்கிறார்கள்.

ஐந்து வீதத்துக்குக் குறைவாக எடுக்கக்கூடிய கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் என்று மன்றாடுகிறார்கள். கிடைக்காது என்று எதிர்வுகூறுவதற்கு இவர்கள் என்ன சோதிடர்களா? இவர்கள் எத்தகைய விசமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்தத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும். மாம்பழம் சின்னத்துக்கு போடுகின்ற உங்கள் வாக்குகள் ஒருபோதும் வீண்போகாது என்று உறுதிபடக் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.