ராம்குமாருக்கு மனச்சிதைவு நோயா? மருத்துவர் விளக்கம்

423 0

Swathi_ramkumarசுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவனா? இக்கொலையை செய்தான் என்று அந்த ஊரே அதிர்ந்து போய் கிடக்கிறது.
ராம்குமாரை பற்றி ஊரில் போய் விசாரித்த சென்னை தனிப்படை போலீசார், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் கூறும் அத்தனை தகவல்களையும் வாக்கு மூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். அப்போது, ஊர்காரர்கள் ராக்குமாரை பற்றி கூறும்போது, அவன் ரொம்ப நல்ல பையனாச்சே… அவனா இப்படிச் செய்தான் என்று கூறியுள்ளனர்.

அந்த அளவுக்கு ஊரில் நல்ல பெயர் எடுத்த ராம்குமார்தான், இன்று எல்லோரும் கொடூரமானவனாக பார்ப்பவனாக மாறிப்போய் இருக்கிறான். எதைப் பற்றியும், யாரிடமும் அதிகம் பேசமாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் என்றே ராம்குமாரை பற்றி விசாரித்த போது தெரிய வந்துள்ளது. இப்படி ஒரு மனநிலையில் ராம்குமார் வளர்ந்ததே இன்று அவனுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

சுவாதியை விடாமல் பின் தொடர்ந்து சென்று விரட்டி விரட்டு காதலித்த ராம்குமார், தனது காதலை சுவாதியிடம் திரும்ப… திரும்ப…. கூறி இருக்கிறான். ஆனால் இதுபற்றி வேறு யாரிடமும் ஒருவார்த்தை கூட அவன் பேசவில்லை. ஒரு வேளை அப்படி பேசி இருந்தால்… தனது காதல் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தால் ராம்குமார் இந்த நிலைக்கு சென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காதோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது. இப்படி தனது ஒருதலை காதலை சுவாதியிடம் மட்டும் சொல்லி விட்டு வேறு யாரிடமும் கூறாமல், மனசுக்குள் போட்டு பூட்டி வைத்ததே, கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு சொந்த ஊரில் நண்பர்கள் கிடையாது, இது தொடர்பாக அவரது உறவினர் பாப்பா கூறியதாவது:–

ராம்குமார் சொந்த ஊரில் யாரிடமும் அதிகமாக பேசியதும், பழகியதும் கிடையாது. அவருக்கு ஊரில் நண்பர்களும் கிடையாது. சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்ப்பதுதான் ராம்குமாருக்கு வேலை. ஆடு மேய்க்காத நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.

நேற்று முன்தினம் ராம்குமார் ஆடு மேய்க்கும்போது நான் பார்த்தேன். அப்போது கூட முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சுவாதி கொலை பற்றியும் போலீசார் வெளியிட்ட புகைப்படம் பற்றியும் கடந்த ஒரு வாரமாக டி.வி.யில் பார்த்து வந்தேன். புகைப்படம் தெளிவாக இல்லாததால் அது ராம்குமார் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்று மனநல மருத்துவர் அதிர்ச்சி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட அரசு மனநல மருத்துவ அலுவலர் டாக்டர் பதூர் மொய்தீனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: ஒருதலைக் காதல் என்பது எப்போதுமே விபரீதமானது. ஒரு சில வாலிபர்கள் ஏதாவது ஒரு பெண்ணை காதலிப்பார்கள். அதுபற்றி அந்த பெண்ணிடம் கூறவும் மாட்டார்கள். தன்னை காதலிக்கும் வாலிபர் யார்? என்பது நீண்ட நாட்கள் கூட அப்பெண்ணுக்கும் தெரியாமலேயே இருக்கும்.

இதுபோன்ற சூழலில் நாளுக்கு நாள் ஒருதலைக் காதலில் ஈடுபடும் வாலிபரின் மனதில், அப்பெண்ணை பற்றிய ஆசைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படி ஒருதலைக் காதலில் ஈடுபடும் வாலிபர்கள் தைரியமாகச் சென்று காதலை சொல்வதற்கும் தயங்குவார்கள்.

அதையும் தாண்டி விரும்பிய பெண்ணிடம் அவர்கள் காதலை சொல்லும்போது, அந்த பெண் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நொறுங்கிப் போகும் மனநிலையிலேயே இருப்பார்கள். இது ஒருவித மனச்சிதைவு நோயாகும்.

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் ராம்குமார் என்பவரும், இதுபோன்ற மனநிலையில்தான் நிச்சயமாக இருந்திருப்பார்.

இப்படி மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள். இது போன்ற மனநிலையில்தான் ராம்குமார் இருந்திருக்க வேண்டும்.

இதனை ஆங்கிலத்தில் ‘‘டெலுசன் லவ்’’ (காதல் மாயை) என்பார்கள். எப்படியாவது காதலிக்கும் பெண்ணை அடைந்து விட வேண்டும் என்கிற எண்ணத்தை இந்த காதல் தூண்டிக் கொண்டே இருக்கும். அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அவர்கள் மனதில் ஏற்படும். ராம்குமார் யாருடனும் அதிகம் பேசாதவராக அமைதியாக இருந்துள்ளார். இப்படி இருப்பவர்கள் ‘‘நல்ல பிள்ளை’’ என்று பெயர் எடுத்து வைத்திருப்பார்கள்.

அதுபோன்று பிள்ளைகள் இருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றார்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களை மனநல டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும். பெரும்பாலும் இதுபோன்றவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள். யாரிடமும் எந்த வி‌ஷயத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அப்படி இருப்பதும் ஆபத்தில் முடியும். எனவே எந்த மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும், அதுபற்றி நமக்கு நெருக்கமான யாரிடமாவது மனம் விட்டு பேசி விட வேண்டும். அப்போதுதான் மனதில் உள்ள பாரங்கள் குறையும். இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.

Leave a comment