காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

450 0

201607031316311581_Cauvery-irrigation-area-to-stop-ONGC-hunger-strike_SECVPFகாவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தஞ்சையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை விட மோசமான ஷேல் எரிவாயு திட்டத்திலும் நீரியல் பிளவு முறை தான் கடைபிடிக்கப்படுகிறது. இது காவிரி பாசன பகுதியையே பாலைவனமாக்கிவிடும். எனவே ஷேல் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.

மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்தியஅரசு ரத்து செய்தாலும், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிடவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் பெரும்பகுதி பாலைவனமாவிடும். எனவே மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தையும், நீர் பங்கீட்டு குழுவையும் மத்தியஅரசு அமைக்க வேண்டும். மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகஅரசு எடுத்து வரும் அணை கட்டும் முயற்சியை மத்தியஅரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி பாசன பகுதிகளில் துளையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது. இதன் விளைவாக காவிரி பாசன பகுதி வெப்ப மண்டலமாக மாறிவிட்டது. எண்ணெய் கசிவால் நிலங்கள் மலடாகி வருகின்றன. நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இப்போது காவிரி பாசன பகுதியையே பாலைவனமாக்கும் திட்டமாக ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறது. காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது பணிகளை நிறுத்திவிட்டு காவிரி பாசன பகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த உண்ணாவிரதத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தொடங்கி வைக்கிறார். உண்ணாவிரதத்தை காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ முடித்து வைத்து பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.

Leave a comment