வவுனியாவில் தமிழர் பாரம்பரியத்தை நினைவுகூரும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!

347 0

வவுனியா, தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபிக்கு முன்பாக ஆடிப்பிறப்புக் கொண்டாடப்பட்டது.

வவுனியா முச்சக்கரவண்டி சங்கத்தின் அனுசரணையில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரசபையின் மேற்பார்வையில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டது.

சோமசுந்தரப் புலவரை நினைவுகூரும் முகமாகவும் தமிழர் பாரம்பரிய நிகழ்வாகவும் ஆடிப்பிறப்பு தினத்தில் வருடாவருடம் சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபியில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழருவி சிவகுமார் சோமசுந்தரப் புலவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் சொற்பொழிவை மேற்கொண்டார். அத்துடன், ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலை விபுலானந்தாக் கல்லூரி மற்றும் தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் பாடினர் .

இந்நிகழ்வில் கொழுக்கட்டை, ஆடிப்பிறப்புக் கூழ் என்பன கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில், முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் எஸ்.ரவீந்திரன், அதன் உறுப்பினர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வி.பிரதீபன், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், மற்றம் வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.