கதிர்காம யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளா கியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் யாத்திரிகர் ஒருவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, குறித்த நபர் கதிர்காமத்தில் தங்கியிருந்த விடுதி, அதன் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவை, திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இராணுவ கொப்ரல் ஒருவரே இவ்வாறு கதிர்காம யாத்திரைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி 20 பேர் கொண்ட குழுவினருடன் கதிர்காம யாத்திரைக் குச் சென்று பின்னர் அங்குள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். கிரிவெஹர மற்றும் தேவாலயத்திற்குச் சென்றுகடந்த 8ஆம் திகதி அங்கிருந்து திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் ஊவா மாகாண சபையின் சுகாதார பணிப்பாளரின் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபரின் குழுவினர் செல்ல கதிர்காமம் மற்றும் அங்குச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குச் சென்றுள்ளதாகவும் பலருடன் நெருங்கிப் பழகியதாகவும், அத்துடன் குறித்த குழுவினருடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கதிர்காமம் சென்றிருந்த இராணுவ கொப்ரல் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைக் கண்டுபிடிக்கக் கதிர்காமம் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சிறப்பு விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் கதிர்காமத்தில் மேலும் பலர் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணக்கூடும் என்பதனால் அனைத்து மக்களும் அத்தியாவசிய விடயங்களைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் வெளியே செல்ல வேண்டாம் எனவும், மக்களுடன் நெருங்கிப் பழகுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் சுகாதார ஆலோசனைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதேச மக்களிடம் சுகாதார பரிசோதகர் சமன் திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இம்முறை ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பெரஹேரவில் பங்கேற்கும் கலைஞர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

