ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் – இரா.சம்பந்தன்

224 0

சம்பூர் நிலங்களை கடந்த அரசாங்கம் அனல் மின் நிலையம் என்ற போர்வையில் கபளீகரம் செய்திருந்த பொழுது எமது மக்கள் வழங்கிய ஒரு ஆணையின் அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை செய்தன் மூலம் சம்பூர் மண்ணை மீட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் 13ம் திகதி சம்பூரில் நடைபெற்ற த.தே.கூ. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தலைமை வேட்பாளர் உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் வேட்பாளருமான க.குகதாசன் மற்றும் வேட்பாளர்களான கந்தசாமி ஜீவரூபன் செல்வராஜா பிரேமரதன் இரா.சச்சிதானந்தம,; சுலோசனா ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.மூதூர் பிரதேசசபையின் சம்பூர் வட்டார உறுப்பினர் ஜெகன் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பூர் காணிகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடைய மனையின் சகோதரருக்கு வழங்கப்பட்டு கொரிய கம்பனி ஒன்றிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.அப்போது அவரால் இக்காணிகளை சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எமது மக்களின் முழுமையான ஆதரவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரத்து செய்ய வைத்து இந்த சம்பூர் மண்ணை மீண்டும் இக்கிராம பூர்விக மக்களுக்கே கையளிக்க வழி வகுத்தோம்.

இவ்வாறு மக்கள் ஒரு மித்து ஒற்றுமையாக நின்று ஓரணியில் தமது வாக்குப் பலத்தை நிறுவித்தால் எமது இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தில் வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் 20 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொள்வதன் மூலம் நாம் பலமான ஒரு சக்தியாக பாராளுமன்றத்தில் எமது மக்களின் உரிமையை பெற முடியும் அத்துடன் தடைபட்டுள்ள புதிய அரசியல் சாசனத்தையும் நிறைவேற்றி எமது உரிமையை அடைய முடியும்.

சிறிய கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை அழிப்பதன் மூலம் அவர்களால் வெற்றி பெற முடியாது அவ்வாறு அழிக்கப்படும் வாக்குகள் வீணாக பயனற்றதாகவே போகும் இவ்வாறானவர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்டு எமது தமிழ் பிரதிநிதித்துலவத்தை இல்லாமல் செய்வதற்கு களமிறக்கபட்டவர்கள் எனவே உங்களுடைய வாக்கினை சிந்தித்து அளிக்க வேண்டும்.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.