சர்க்கரை ஆலையில் ‘சானிடைசர்’ உற்பத்தி

207 0

மோகனுார் சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும், ‘சானிடைசர்’ தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சானிடைசர் உற்பத்தி செய்யும் பணியை, ஆலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆலையின் மேலாண் இயக்குனர் விஜய்பாபு கூறியதாவது:சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பெயரை சுருக்கி, ‘சாகோஸ்’ என்ற பெயரில், 100 சதவீதம் தரமான, சானிடைசர் திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும், 10 ஆயிரம் லிட்டர் தயார் செய்யப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்காக, மாதம்தோறும், 600 லிட்டர் சப்ளை செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், 2,000 முதல், 3,000 லிட்டர் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு, 100 மி.லி., முதல், 10 லிட்டர் அளவு வரை, சானிடைசர் உள்ளது. 100 மி.லி., 48 ரூபாய், 1 லிட்டர், 460 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.