அரசுக் கல்லூரிகளில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: தயார் நிலையில் கல்லூரி நிர்வாகங்கள்

317 0

அரசுக் கல்லூரிகளில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பின், இத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசு, கலை அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் 40-க்கும் மேலான பல்கலைக்கழக கல்லூரிகளும் செயல்படுகின்றன.

பொது ஊரடங்கு காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் இறுதி ஆண்டுத் தேர்வு எழுத முடியவில்லை. ஊரடங்கு நீடிக்கப்படுவதால் இறுதி பருவத் தேர்வு எழுதுவதில் சிக்கல் உள்ளது.

இத்தேர்வை ரத்து செய்ய பல்வேறு தரப் பிலும் கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக முதல்வரும் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒருசில அரசு உதவி பெறும்,தனியார் கல்லூரிகளில் 5-வது பருவத்தேர்வு அடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவும் தள்ளிப்போகும் சூழலில் அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது.

இருப்பினும், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பின், கரோனா தடுப்பைக் கருத்தில் கொண்டு அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப் பட உள்ளனர். ஆன்லைன் மாணவர் சேர்க்கை குறித்து ஒத்திகை பார்த்து, அரசுக் கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க, உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசுக் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியது: ஏற்கெனவே அரசுக் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் நேரில் பெற்று, அந்தந்த கல்லூரி வளாகத்தில் இனச் சுழற்சிமுறையில் மாணவ, மாணவியர் விரும்பிய பாடப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கரோனா ஊரடங்கால் இம்முறை அரசு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் திட்டம் உள்ளது.

இனச்சுழற்சி முறையில் மதிப்பெண் அடிப்படையில் விரும்பிய பாடப்பிரிவு ஆன்லைனில் தேர்வாகி, உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

மாணவர்களுக்கு உதவ மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். பிளஸ்2 தேர்வு முடிவுக்கு பின், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது, என்றார்.