தெலுங்கானாவில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா பாசிட்டிவ் நபர்களை கண்காணிக்க புதிய செயலி

217 0

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப சங்கம் பாசிட்டிவ் நபர்களை கண்காணிக்க புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவைதான் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு தற்போதைய மந்திரமாக உள்ளது.
மருத்துவ அடிப்படையில் அதிகப்படியான பரிசோதனை செய்து பாசிட்டிவ் நபர்களை எவ்வளவு விரைவாக தனிமைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதற்கு முதன்மையானது கொரோனா செயின் பரவலை துண்டிக்க வேண்டும்.
தற்போது அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் வீட்டிலேயே தனிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் விதிமுறையை மீறி வெளியில் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இவர்களை கண்காணிப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது. இதனால் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப சங்கம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (DRDO) இணைந்து பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
அந்த செயலிக்கு சம்பார்க் (Smart Automated Management of Patients and Risks for Covid-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தானாகவே தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்டறியும் புலனாய்வு போன்று செயல்படும்.
பாசிட்டிவ் நபரின் ஸ்மார்ட் போனில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால், 10 நிமிடத்திற்கு ஒருமுறை சர்வருக்கு தானாக பாதுகாப்பு தகவல் சென்றடைந்துவிடும். போனை ஆஃப் செய்து ஆன்செய்தால் கூட தானாகவே ஆக்டிவ் ஆகும் அளவிற்கு தயார் செய்துள்ளனர்.
செயலியை இன்ஸ்டால் செய்த நபர் தன்னுடைய செல்போனில் இருந்து SAMPARC செயலி மூலம் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். அப்போது சர்வர் சரியான நபர்தானா? என்பதை முகத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்ளும். தனிமைப்படுத்தக் கூடிய நபர், அவர் குறிப்பிட்டுள்ள இடத்தை விட்டு வெளியேறினால் தானாகவே அலார்ம் அடிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செல்பி மூலம் அனுப்பும் போட்டோ, பதிவு செய்யும்போது எடுத்த படத்துடன் வேறுபட்டு காணப்பட்டால் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பும். விதிமுறையை மீறும்போது ரெட் அடையாளம் காட்டும். அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்தால், அவர்கள் டிரக்கிங்கில் இருந்து வெளியேற முடியும். அவர்கள் செயலிகை நீக்கவும் செய்யலாம்.
இதை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.