இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது – ரணில் எச்சரிக்கை!

228 0

கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சம் இலங்கையில் நிலவிவரும் இந்த காலத்தில், தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேசி, பொதுத் தேர்தல் தொடர்பாக உரிய முடிவொன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எச்சரிக்கையான ஒரு காலத்தில்தான் இன்று வாழ்ந்து வருகிறோம்.

இதனை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்திலும் அரசாங்கம் பொய்க்கூறிக் கொண்டுதான் இருக்கிறது.

எனவே, தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி உடனடியாக இதற்கு ஒரு முடிவைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில், தற்போது அனைத்துக் கட்சிகளும் பாரிய நிதியை செலவழித்துதான் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென தேர்தலை பிற்போட்டால் அது பாதிப்பாக அமையும்.

எனவே, இப்போதே இதுதொடர்பாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், தேவையின்றி பணத்தை செலவழிக்க வேண்டியத் தேவையும் கட்சிகளுக்கு ஏற்படாது.

இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது. இப்போதே இலங்கைக்கு 6000 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் 12 ஆயிரம் மில்லியன் டொலராக அந்த நிதி அதிகரித்து விடும்.

இதனால், மக்கள் வரலாறு காணாத சுமையை அனுபவிப்பார்கள். இதனை கட்டுப்படுத்தும் வகையில்தான் நாம் செயற்பட வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.