கருங்கல்லில் உயிர்பெற்ற நாதஸ்வரம்- தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை

242 0

தென்காசியை சேர்ந்த சிற்பக்கலைஞர் கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார்.

தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 35). இவர் கல்லில் எழில்மிகு சிற்பங்கள் உருவாக்கும் கலைஞர் ஆவார். தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் பகுதியில் சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் 2 பேரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கோவில்களுக்கு சிற்பங்களை செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடத்த அனுமதி இல்லை. இதனால் அவர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் மாரியப்பனுக்கு தற்போதைய ஓய்வு நேரத்தில் புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவு, கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அவர் தனது நண்பரான தென்காசி மலையான் தெருவை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் ராமச்சந்திரனை அழைத்து, கருங்கல் நாதஸ்வரத்தை காண்பித்தார். அதை அவர் வாசித்தபோது, இனிய ஓசை வந்தது. அவர் ஆச்சரியம் அடைந்தார்.