பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடு: ஐங்கரநேசன்

252 0

மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து நின்றார்கள். அப்போது இனத்தின் நலனுக்காகப் பேரம்பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாவதற்குப் பேரம்பேசத் தங்களுக்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும்; வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இது தொடர்பான தெருமுனைத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று இரவு யாழ்ப்பாணம் பிறவுண் வீதிப் பகுதியில் நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வடமராட்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் புதிய ஆட்சியில் கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவையில் இணைவது குறித்துப் பேசியுள்ளார். மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பானவர்களின் பிரச்சினை போன்றவை தொடர்பாகவேனும் நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றிருக்கமுடியும். ஆனால், அவர்கள் அங்கஜன் அவர்களுக்குப் பிரதி சபாநாயகர் பதவி வழங்கக்கூடாது, டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துத் தாங்கள் நிழல் அமைச்சர்களாகப் பதவி வகிக்க விரும்பினார்களே அல்லாது இனத்தின் நலன் சார்ந்து எதனையும் செயற்படுத்தவில்லை.

சுயேச்சைக் குழுக்கள் தங்களது வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பேசிவருகின்றனர். நாங்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டாலும் தேர்தலின்போது மாத்திரம் தோன்றி மறையும் மழைக்காளான்கள் போன்றவர்களல்லர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கி வலுவான ஒரு அரசியல் கட்சியாகப் பரிணாமித்திருக்கின்றது. தேர்தல் ஆணையத்தில் கட்சிப்பதிவுக்காக விண்ணப்பித்திருக்கிறோம். தேர்தல் உரிய காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் கட்சிப்பதிவு தாமதப்பட சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளோம். இயற்கையை நீயழித்தால் இயற்கையால் நீயழிவாய் என்று கொரோனா உலகத்திற்கு உரத்துப் போதித்திருக்கும் நிலையில் கொரோனாவிற்குப் பின்னரான அரசியல் இயற்கைக்கான தருணமாகவே இருக்கப்போகின்றது. அந்தவகையில் சூழலியத்தை முன்னிறுத்தியுள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அரசியலில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.