சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன்

295 0

மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையின்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?

நீ பெரியவனா, நான் பெரியவனா என்று குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்கே செல்வதில்லை, பல்கலைக்கழகத்தை வைத்து என்ன செய்வது என சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக இருந்த திட்டங்களை மக்களுக்காக நாம் முன்னெடுக்கும்போது விமர்சிக்கின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம்.” – என்றார்.