கணன்று கொண்டிருக்கும் கரும்புலி மில்லரின் ஈகத்தால் உறுதியேற்போம் !- பு.மா.பாஸ்கரன்

471 0

அமெரிக்க மத்திய உளவுத்துறையாலும் அமெரிக்க சிறப்புப் படைகளாலும் பின்தொடர்ந்து கைப்பற்றப்பட்டுப் பொலிவியப் படைகளால் லா கிகுவேரா என்ற இடத்தில் வைத்து 9 ஒக்டோபர்1967 இல் “சே” என்று அழைக்கப்பட்ட சே குவேரா அவர்கள் படுகொலை செய்யப்படார். ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டபோதும் சே அவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார். புரட்சிவாதிகள் இறப்பதில்லை. அவர்கள் ஒடுக்கப்படும் மக்களின் மனங்களில் ஓய்வின்றிப் பயணித்துக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் மூட்டிய புரட்சித் தீ தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.

ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் உள்ளவரை புரட்சிகர சக்திகளும் தோன்றிக்கொண்டேயிருக்கும். இந்து மாவாரியின் மையப்புள்ளியிலே கண்ணீர்த்துளிபோல் இருக்கும் ஈழத்தீவின் பூர்வீக குடிகளான தமிழினம் வந்தேறுகுடிகளான சிங்களவர்களால் இனப்படுகொலைக்குள்ளானபோது தற்காத்துக்கொள்ள முன்னெடுத்த மென்முறைதழுவிய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டபோது வன்முறை தழுவிய போராட்டங்களே காப்பரணாக நின்றது. அதனை தகர்த்தெறிந்து அழிவுகளை விதைத்தவாறு நகர்ந்த சிங்களப்படைகளை சிதறடிக்கத் தன்னையே தற்கொடையாக தரவந்தான் வல்லிபுரம் வசந்தன் என்ற இயற்பெயர் பூண்ட ஒரு மறத்தமிழன்.

மில்லரெனும் நாமம் தாங்கிக் கந்தக முடிதரித்துப் பாரவூர்தியேறியவன் ஆக்கிரமிப்பாளர் தம் படைத்தளம் தகர்தெறியத் தெளிந்தவோர் சிந்தனையும் திடமான மனமுங்கொண்டே உறுதியோடு பாய்ந்தனன். அதனால் உலகமே வியந்து நோக்கும் விடுதலைப் படையானது புலிகள் படை. ஆனாற் சிங்களப் படைகளுக்கோ அச்சத்துக்குரியதானது. கிலிகொண்ட சிங்களம் இந்தியாவின் உதவியை நாடியதும் அதன் பின்னான விடயங்களே இன்றுவரை தடைக்கல்லாகத் தமிழினத்தின் உரிமைப் போராட்டமானது தீர்வற்று நகரும் நிலைக்குக் கரணியமாயின என்பதும் உலகறிந்தது. மில்லரின் ஈகம் பெரும் பூகம்பத்தை விளைவித்த சூலை 5ஆம் நாளென்பது தமிழர் மனங்களில் இயல்பான உணர்வுக்குரியதே. அதனைத் தமிழினம் வெளிப்படையாகவோ அகத்தொளியாகவோ தத்தமது இயல்புக்கேற்ப வணங்குவர் என்பதும் நிதர்சனமானது.

அந்த நிதர்சன மெய்நிலையை எதிர்கொள்ள முடியாத சிங்களமும் அவர்தம் அடிவருடிகளும் கட்டவிழ்த்துவிடும் கயமைத் தனத்தின் வெளிப்பாடகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.பணியகம் மீதான சிங்கள அரச படைகளின் பாய்ச்சலைப் பார்க்க வேண்டியுள்ளது. எங்கே தமது கைத்தடிகளான ஏவலாளர்கள் தோற்றுவிடுவார்களோ என்ற அச்சநிலை கரணியமாகத் திட்டமிட்ட அடிப்படையில் இந்த அரைவேக்காட்டுத்தனத்தை அரசு அரங்கேற்றி உள்ளது. ஏன் வெறெந்தவொரு தமிழ் அரசியற் கட்சியினதும் பணியகத்திலும் தேடுதல் நடத்த முடியாதா? வணக்க நிகழ்வைச் செய்ய முடியாதா? செய்ய முடிந்தாலும் அவர்கள் செய்யமாட்டார்கள் என்பது சிங்கள அரச படைகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை அப்படி யாராவது நினைத்தாற்கூடச் சிங்களவரோடு ஐந்து வயதிலிருந்து கூடிவாழ்பவரும், ஆயுதப் போராட்டத்தை ஏற்காதவருமான சுமந்திரன் போன்றவர்கள் விடுவார்களா? அதேவேளை இன்னுமொரு தந்திரமும் இருக்கிறது. அதாவதுஇ இன்றிருக்கும் உலக ஒழுங்கில் பயணிக்கக் கூடியதானதொரு சிந்தனை மையத்தைத் தோற்கடிப்பது சிங்களத்தரப்புக்கு மிகவும் அவசியமானதாகவும் உள்ளதை நாம் மனம் கொள்ளவேண்டும். ஏன் அப்படித் தோற்கடிக்கும் அளவிற்கு வல்லமையுடையதா(?)தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று நீங்கள் சிந்திக்கலாம் அல்லது வினவலாம்.

ஆம்.உலகம் ஏற்றொழுகக் கூடியதும் அனைவருக்கும் நீதியும் நியாயமுமான சமத்துவத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தவல்லதும், பிரிவினை அற்றதானதுமான அரசியற்கோட்பாடான “இரு தேசங்கள் – ஒரு நாடு” என்ற நிலைப்பாடானது மாறிவரும் பூகோள மற்றும் பிராந்திய சூழல்களில் ஆயுதப்போராட்டத்தை அழுத்தி நகர்ந்ததுபோல் நகர்ந்துவிட முடியாததொரு நிலையைத் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புள்ளதைச் சிங்கள மற்றும் தமிழின விரோதசக்திகள் கணித்துள்ளதன் விளைவேயாகும். அதனாற்றான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் கட்சிப் பணியகங்களைச் சோதனையிடுவது, வேட்பாளர்களை விசாரணைக்கிழுப்பது மற்றும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதோடு தேவையென்றால் அடையாளமற்ற கொலைகள் கூட நடத்தப்படலாம் என்ற துயரமான நிகழ்வுகளையும் நாம் கவனத்திற் கொள்ளுதல் அவசியமானது.

இங்கிருந்தே இதன் ஏதுநிலை குறித்து வாக்குச்சீட்டைப் பயன்படுத்த இருக்கும் தமிழினம் ஆழமாக உற்றுநோக்குவதோடு, முள்ளிவாய்க்கால் துயரம் தோய்ந்த பதினொரு ஆண்டுகள் கடந்து நிற்கும் இக்காலத்தில் இதுவரை வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பியோர் செய்தவை என்ன(?) என்ற வினாவை நாங்கள் அனுப்பிய வேட்பாளர்களைக் கேட்பதைவிட, முதலில் எங்களை நாங்களே கேட்பதும் எங்கள் மனதோடு உரையாடுவதனூடாகவுமே மாற்றங்களை நோக்கி நகரமுடியும். எதிர்வரும் தேர்தலில் பல்வேறுபெயர் பூண்ட கட்சிகளானபோதும் இரு தரப்புகளே களத்தில் நின்கின்றன. அவையாவன (1) சிங்களத் தரப்பும் சிங்களத்தை ஆதரிக்கும் தமிழ்த் தரப்பு(2) தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் தரப்பு. இந்த இரு தரப்புகளையும் மதிநுட்பத்தோடு இனங்கண்டு நாம் இந்தத் தேர்தலைச் சரியாக எதிர்கொள்ளாவிடின் இரண்டாம் கட்ட முள்ளிவாய்க்காலில் நாமாக முன்சென்று அமிழ்ந்தோராவோம் என்பதே மெய்நிலையாகும் என்பதையே இதுபோன்ற அத்துமீறிய அடாவடித்தனங்கள் சுட்டிகின்றன.

நாம் கடந்து செல்லும் சூலை மாதமானது பல்வேறு வகைளில் ஈழத் தமிழினத்தோடு பின்னிப் பினைந்துள்ளதென்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த வரலாற்றின் உயரீகமாக நேரம் குறித்து உயிரீகம் புரிதலென்பது உலக இன்ப துன்பங்களைக் கடந்த ஞானிகளால் மட்டுமே சாத்தியமானது. உயிரால் சுடரேற்றிய மில்லரின் மாதம் மட்டுமல்ல எம்முறவுகள் ஈழத்தீவெங்கும் கொன்றொழிக்கப்பட்டுச் சொத்துகள் சூறையாடப்பட்டு ஏதிலிகளாக வட-கிழக்கு நோக்கித் துரத்தியடிக்கப்பட்ட மாதமுமாகும் என்பதையும் மனதேற்றித் தமிழினத்தின் வாழ்வு மலர உயிராற் சுடரேற்றிக் கணன்று கொண்டிருக்கும் கரும்புலி மில்லரின் கனவுக்கு வலுவூட்டும் வகையிலே தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் மக்களாக உறுதியெடுத்து வாக்குப்பலத்தையே சக்தியாக மாற்றிக் குறைந்தபட்சக் கோரிக்கையான “இரு தேசங்கள் – ஒரு நாடு” என்ற உலகேற்கும் கோட்பாட்டை சிங்களத்திற்கு புரிவைக்க 2020 தேர்தற்களத்தைப் பயன்படுத்துவதே குறைந்தபட்சமேனும் தமிழினம் தலைநிமிர்வதற்கான வழியாகும்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் – திருக்குறள்-

நன்றி
பு.மா.பாஸ்கரன்