சிவஞானம் சிறீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம்! -தமிழரசு செயலாளருக்கு விமலேஸ்வரி கடிதம்

323 0

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக இருந்து கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விமலேஸ்வரி சிறிஸ்காந்தரூபன் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எனது விசுவாசத்திற்குரிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஐயா, செயலாளர் துரைராஜசிங்கம் ஐயா ஆகிய இருவருக்கும் நான் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். என் மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகஉள்ளேன்.

அதற்கு முன்னராக, எமது கட்சின் சிலர் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என்கின்ற கோரிக்கையினையும் தங்கள் முன் தாழ்மையுடன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். என்னால் இதன்கீழ் பரிந்துரைக்கப்படும் விடயங்களிற்கு தங்கள் சட்ட நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று விசாரணைகளையும் செய்ய வேண்டும் என்பதனை நான் வெளிப்படையாகவே கேட்டுக் கொள்கின்றேன்.

சுன்னாகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரனால், சுமந்திரனின் அறிவுறுத்தலின் படி, மானிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சித் தலைவர் பிரகாஸ் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ் மக்களின் விசுவாசத்திற்குரிய தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை தரம் தாழ்த்தி ஊடகவியலாளர் வித்தியாதரனைக் கொண்டு விமர்சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனையும் கூட்டத்தில் இருந்து விமர்சிக்கும்போது கைகொட்டி ஆரவாரம் செய்த சயந்தன், கரிகரன், தயாளன் ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானும் தமிழ்த் தேசியவாதிகளும் கட்சி உறுப்பினர்களும் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இது தொடர்பான கருத்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னால் நடந்த நேர்காணலிலும் நான் பலஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன். சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் சுமந்திரனை தமிழரசு கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என தலைவர் மாவை சேனாதிராஜா வழங்கிய உறுதி மொழி இன்று வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை அதனை உடன் நடைமுறைப்படுத்துங்கள்.

விடுதலைப் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மக்கள் கொடுத்த ஆணையினால்தான் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை சர்வதேச அங்கீகாரத்துடன் உள்ள மிகப் பெரும் மக்கள் ஆணையை கேள்விக்குட்படுத்தி 75 கள்ள வாக்குகளை நான் போட்டுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம் என்பதுடன் பொது வெளியில் எமது மக்கள் அணைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கள்ள வாக்குகள் போட்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்களா? – என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள வாக்குகளால்தான் கொண்டுவரப்பட்டன? இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறீதரனுக்கு எதிராகக் கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக் கும் என்று நம்புகின்றேன்.