ஓமந்தை பிரதேச செயலகம் வவுனியாவுக்கு அத்தியாவசியமானது – சத்தியலிங்கம்

229 0

ஓமந்தை பிரதேச செயலகம் வவுனியா மாவட்டத்துக்கு மிக முக்கிய தேவையொன்று. அதனால்தான் ஓமந்தை பிரதேச செயலகம் தேவை என்ற முன் மொழிவை செய்து அதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டதாகவும் ஆனால் தானே அந்த திட்டத்தை பின்னர் வேண்டாம் என தடை செய்யும் நிலையும் ஏற்பட்டது என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அங்கே மேலும் கருத்து தெரிவித்த சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார் ;வவுனியா நகர பிரதேச செயலகம் 131,607 நபர்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் வவுனியா வடக்கு 22391, வவுனியா தெற்கு 27,440, மற்றும் வெண்கல செட்டிகுளம் 14,191 என்ற அடிப்படையில் மக்களை கொண்டுள்ளது.

வவுனியா நகரம் போன்று இலங்கையில் மக்கள் தொகை அதிகமான பிரதேச சபையினை காண்பது கடினம். எனவே வவுனியா நகர பிரதேச செயலகத்திலிருந்து ஒரு பகுதியினை பிரித்து ஓமந்தை பிரதேச செயலகத்தை உருவாக்கும் திட்டமே என்னுடையது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த திட்டத்தை வைத்துக் கொண்டு வவுனியா நகரத்திலிருந்து 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 4 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும் இணைத்து ஓமந்தை பிரதேச சபை அமைக்கப்படவுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அறிந்து கொண்டேன். இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே குறைந்த மக்கள் தொகையுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக மக்களை குறைப்பதனால் என்ன பயன்? ஏற்கனவே வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் மேலதிக குறைப்பும், வவுனியா நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ள பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள பிரதேச செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கையே இது.

இதனை எமது தலைவர் சம்மந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோருக்கு அறிவித்து அதன் மூலம் அப்போதைய பிரதமர் மூலம் இந்த திட்டம் தடை செய்யப்பட்டது.

இந்த விடயங்கள் எதுவும் தெரியாமல் ஓமந்தை பிரதேச செயலகம் உருவாகாமல் தடுக்கப்பட்டது என்னால் என அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு ; தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது உண்மைதான். ஆனால் எம் மக்களையும், இந்த மண்ணையும் பாதுகாக்கவே நான் இதனை செய்தேன். நான் மாகாண சபை அமைச்சராக, உறுப்பினராக இருந்த ஐந்து வருடங்களில் செய்தவற்றை பட்டியலிட்டு காட்டுகிறேன். முடிந்தால் ஆனந்தன் 22 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்தார் என கூற முடியுமா? நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்து மக்களுக்கான அபிவிருத்தியையும், சேவைகளையும் செய்து காட்டும் போது அவர் எதுவும் செய்யாமல் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தூங்கியது ;மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் என்னை பற்றி கதைக்கிறார். இனி அதனை நிறுத்திவிட்டு தான் என்ன செய்யப்போகிறார் ; என கூறி மக்களிடம் வாக்கு கேளுங்கள் என்ற அறிவுரையை நான் அவருக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

ஓமந்தை பிரதேச செயலக பிரச்சினை தொடர்பாக வவுனியா வடக்கு மக்களான உங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமை. நான் பாராளுமன்ற உறுப்பினராகியதும் உடனடியாக சரியான முறையிலான ஓமந்தை பிரதேச செயலகம் உருவாக்கப்படும் என  முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளருமான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.